உத்தரபிரதேச அரசு கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை தொடர்ந்து மறைத்து வருகிறது என்றும் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை அம்மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று 281 சதவீதம் அதிகரித்துள்ளன என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (ஏப்ரல் 14), இணையவழியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பேசிய பிரியங்கா காந்தி, “உத்தரபிரதேசத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், மாநில அரசு உண்மையான தரவுகளை மறைத்து வருகிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய முதல் நாளிலிருந்து அரசு எச்சரிக்கையாக இருந்திருந்தால், இதுபோன்ற கொடுமையான நாட்களை மக்கள் அனுபவித்திருக்க வேண்டியிருக்காது. உத்தரபிரதேச அரசு கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை தொடர்ந்து மறைத்து வருகிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – சுடுகாடுகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்சுகள்
கொரோனா தொற்றைக் கையாள்வதற்கும் அதைக் கட்டுப்படுத்துவதற்கும் உத்தரபிரதேசத்திடம் எந்த கட்டமைப்பும் திட்டமும் இல்லை என்றும் இத்தனை தீவிரமாக தொற்று பரவி வருவதற்கு மத்திய மாநில அரசுகளின் தோல்வியுற்ற, உணர்வற்ற மற்றும் பொறுப்பற்ற கட்டமைப்பே காரணம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
“உத்தரபிரதேச அமைச்சர் பிரிஜேஷ் பதக்கின் கடிதத்திலிருந்து, இம்மாநில மருத்துவமனைகளில் கொரோனா சோதனைகள் செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை, கொரோனா தொற்று எண்ணிக்கை நாடு முழுவதும் 70 சதவீதம் அதிகரித்துள்ளன. ஆனால், உத்தரபிரதேசத்தில் கொரோனா நோய்த்தொற்றுகள் 281 சதவீதம் அதிகரித்துள்ளன.” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
மேலும், “உத்தரபிரதேசத்தில் உள்ள 24 கோடி மக்கள் தொகையில், 1 கோடி மக்களுக்குக் கூட தடுப்பூசி போடப்படவில்லை. லக்னோவில் உடல்களை தகனம் செய்ய நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டியிருக்கிறது. இறுதிச் சடங்குகள் செய்ய தகன மேடைகளில் எரியூட்ட விறகு பற்றாக்குறை இருக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள சாதாரண குடிமக்கள் இறந்து போன தம்முடைய குடும்பத்தினரின் இறுதிச் சடங்குகளை கண்ணியமாக செய்யக் கூட நாதியற்று நிற்கிறார்கள். தங்கள் அன்புக்குரியவர்களை தகனம் செய்ய, இடுகாடுகளில் காலை முதல் இரவு வரை நிற்கிறார்கள்.” என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.