Aran Sei

‘அப்பல்லோ மருத்துவமனையில் திட்டமிட்டபடி தடுப்பூசிகள் போடப்படும்’ – மாநில அரசுகளுக்கு கிட்டாத தடுப்பு மருந்துகள் தனியார் வசம் இருப்பது எப்படி?

டுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்த முடியாது என தமிழகம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், தடுப்பூசி செலுத்துப்படும் என தனியார் மருத்துவமனைகள் அறிவித்துள்ளன.

கொரோனா தடுப்பூசி திட்டத்தின் மூன்றாவது கட்டமாக நாளை (மே 1) முதல் 18 வயது கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு அனுமதியளித்தது.

மேலும், இதற்காக தடுப்பூசி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் 50 விழுக்காட்டை நேரடியாக மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்து கொள்ள அனுமதியளித்துள்ளது.

‘தடுப்பூசி கிடைக்காததால், நாளை 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடக்காது’ – தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவும் அறிவிப்பு

மத்திய அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படும். எஞ்சிய தேவைக்கு மாநில அரசுகள் தடுப்பூசி நிறுவனங்களிடம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதன்படி மாநில அரசுகள் ஆர்டர் செய்த தடுப்பூசிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை. மேலும், மத்திய அரசும் இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே, நாளை திட்டமிட்டபடி 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த முடியாது என தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தெரிவித்துவிட்டன.

‘மத்திய அரசின் நடவடிக்கையால் நாளை தடுப்பூசி முகாம் தொடங்குவது சந்தேகமே’ – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நாளை அறிவிக்கப்பட்டபடி தடுப்பூசி செலுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் சோபனா கமிநேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளைப் பின்பற்றித் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவின் இணையதளத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்த அனைவருக்கும் நாளைத் தடுப்பூசி செலுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்