லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி பிரபுல் கே படேல், அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராகவும், கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் மற்றும் குண்டர் சட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கு எதிராகவும், அம்மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவாக #Lakshadweep ஹேஷ்டேகுடன் மலையாள திரைக் கலைஞர் பிருத்விராஜ் ட்விட்டர் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
#Lakshadweep pic.twitter.com/DTSlsKfjiv
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) May 24, 2021
அந்த அறிக்கையில், “லட்சத்தீவுகள் பற்றிய எனது முதல் நினைவுகள் நான் ஆறாம் வகுப்பில் இருக்கும்போது பள்ளி சுற்றுலாவாக சென்றதுதான். நீலநிற நீர் மற்றும் தெளிவான கடற்காயல் (lagoon) ஆகியவற்றை நான் பிரமிப்புடன் பார்த்தது இன்றும் நினைவில் இருக்கின்றது. அடுத்ததாக பல ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தீவுகளுக்கு படப்பிடிப்பிற்காக சென்ற சாச்சியின் ‘அனார்கலி’ படக்குழுவின் ஒரு பகுதியாக சென்றேன். கவரத்தில் இரண்டு மாதங்கள் கழித்தேன், என் வாழ்நாள் முழுவதற்குமான நினைவுகளையும் நண்பர்களையும் உருவாக்கினேன். அனார்கலிக்கு பிறகு, நான் இயக்குனராக அறிமுகமான ’லூசிபர்’ படத்தை அங்குப் படமாக்கினேன்.” என கூறியுள்ளார்.
”கடந்த சில நாட்களாக, அந்த தீவுகளில் இருந்து எனக்குத் தெரிந்த மற்றும் தெரியாத நபர்களிடமிருந்தும் தகவல்கள் கிடைக்கப் பெறுகிறேன். அங்கு என்ன நடக்கிறது என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்ட வர என்னால் இயன்றதை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறேன். சில நேரங்களில் கெஞ்சப் படுகிறேன். நான் அந்தத் தீவுகளைப் பற்றிக் கட்டுரை எதையும் எழுதபோவதில்லை. ஆனால் அத்தீவு புதிய நிர்வாகியின் ‘சீர்திருத்தங்கள்’ ஏன் முற்றிலும் வினோதமாக இருக்கின்றன” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தீவு மக்கள் பலருடன் பேசியதிலிருந்து, அவர்கள் யாரும் சீர்திருத்தங்கள் என்றழைக்கப்படும் இவற்றில் மகிழ்ச்சியடையவில்லை என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
”எந்த ஒரு சட்டமும், சீர்திருத்தமும், திருத்தமும் ஒருபோதும் நாட்டிற்காக இருக்க கூடாது. நாட்டு மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு நாடு, மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தை உருவாக்குவது புவியியல் அல்லது அரசியல் எல்லைகள் அல்ல. அதை அங்கு வாழும் மக்கள் தான் உருவாக்குகின்றனர். பல நூற்றாண்டுகளாக அமைதியாக வாழ்ந்து வருவதை முன்னேற்றம் என்ற பெயரில் சீர்குலைப்பதை எப்படி ஏற்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
லட்சத்தீவுகளில் கொரோனா பரிசோதனையில், நோய் தொற்று உறுதி ஆகும் நபர்களின் எண்ணிக்கை 68 விழுக்காடாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றைச் சமாளிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தீவின் புதிய நிர்வாகியாக பதவியேற்ற பிரபுல் கே படேல், கொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு தளர்வுகளை அனுமதித்தார்.
”தீவில் கொரோனா பரவலுக்கு இதுவே காரணம். புதிய நிர்வாகி பதவி ஏற்றப் பிறகு முதல் சட்ட திருத்தமாக, குண்டர் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார். எந்தக் குற்றச் செயல்களும் பதிவாக தீவில் குண்டர் சட்டம் நடைமுறைப்படுத்தி இருக்கும் செயல் ஜனநாயகமற்றது என அத்தீவு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்” என தி குயிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.