இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கமான சமத்துவச் சமூகத்தைக் கட்டமைக்க, சாதியை நிராகரித்து, மதங்களைக் கடந்து, மனிதத்தை உயர்த்திப் பிடித்து, உழைக்கும் வர்க்கமாக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ் நாடு மக்களைக் கோரியுள்ளது.
இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 14), பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் முனைவர் பி. இரத்தினசபாபதி, துணைத் தலைவர் முனைவர் முருகையன் பக்கிரிசாமி, பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருத்தைக் கருத்தால் வெல்ல முயல்வதே மக்களாட்சி மாண்பு. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டு, ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது.
உண்மைச் சம்பவத்தைத் தழுவிதான் எடுக்கப்பட்டுள்ளதே தவிர, உண்மையான கதை மாந்தர்களைக் கொண்டு எடுக்கப்படவில்லை.
இந்தப் படம் எந்த தனிநபர், அல்லது இயக்கத்தைக் குறித்தது அல்ல (Disclaimer) என்பதைப் படத்தின் தொடக்கத்திலேயே மிகத் தெளிவாக அறிவிக்கப்படுகிறது.
படத்தின் மூலம் காவல் துறையைச் சார்ந்த சில அதிகாரிகளின் பயங்கரவாதச் செயல் வெளிக்கொணரப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகளில் சிலர், தன் விசாரணயின் மூலம் கண்டுபிடிக்க முடியாத அல்லது உண்மையைக் கண்டுபிடிக்க விரும்பாத வழக்குகளில், எண்ணிக்கையில் மிகக் குறைவாக, அதிலும் ஒர் இடத்தில் குவியாமல் பிரிந்து கிடக்கும் சமூகத்தினரை, சிக்கவைத்து, ஏதும் அறியாத அப்பாவி மக்களைத் தண்டனைக்கு உள்ளாக்குவது மட்டும் அல்லாமல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21, உத்தரவாதப்படுத்தும் கண்ணியமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையைப் பறித்து, அம்மக்களைக் கொடுரமாக தாக்கி, அதற்குப் பிறகு, உடல் ரீதியகவும், மனரீதியாகவும் இயல்பான வாழ்க்கையை அவர்கள் ஒருபோதும் வாழ முடியாத அளவிற்கு, அவர்களை அடித்துத் துன்புறுத்தியுள்ள காவல்துறையின் சித்திரவதைச் (custodial torture) செய்தியை தழுவி எடுக்கப்பட்டப் படம்.
படம் வெளிவந்த பிறகாவது தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய பழங்குடி மக்கள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் தாமாகவே முன்வந்து இவ்வாறு நடந்ததா? நடக்கிறதா? என்ற விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம், தமிழ் நாடு காவல் துறையாவது, இத்தகையச் செயல்கள் தங்களின் துறைக்குப் பெரிய அவமானம் என்பதை உணர்ந்து, அத்தகையச் சம்பவம் நடந்ததா? நடக்கிறதா? என்ற விசாரணையை மேற்கொண்டு, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தெளிவுகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
இத்தகைய சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்ட அனைவரும் விவாதித்திருக்க வேண்டும்.
அவ்வாறு எதுவுமே நடக்காதது, தமிழ் மக்களுக்கு மிகப் பெரும் அவமானம். சமூகத்தின் அமைதி, தமிழ்ச் சமூகம் கற்றறிந்த சான்றோர் வாழும் சமூகமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
குற்றம் இனி நடக்காமல் இருக்க, விவாதிப்பதற்கு பதிலாக, விவாதத்தைத் திசை திருப்பும் வகையில், தேவையில்லாத, கற்பனைகளையும், புனைவுகளையும் பரப்பிப் பதட்டத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
அதற்குத் தீனி போடும் விதமாக, ஊடகமும் திசைமாறி விவாதம் நடத்துவது வேதனைக்குரியது.
ஊடக அழைப்பின் அடிப்படையில் விவாதத்தில் பங்கேற்ற கருத்தாளர்களை அச்சுறுத்துவது, அவமானப்படுத்துவது, உளவியல் ரீதியாக தாக்குதலை நடத்துவது என்பது சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல.
அதே போன்று, பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தும் புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கவிடாமல் ஒரு கூட்டம் தடுத்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது .
சாதி என்பது சமூகத்தைப் பாகுபடுத்தும் கட்டமைப்பு. மனிதர்களிடையே சாதி, பாலினம் உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டக்கூடாது என்று மிகத் தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 17 கூறுகிறது. சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற உரிமையைப் பிரிவு 14 வழங்குகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950, ஜனவரி 26 அன்றே பாகுபாட்டை அடிப்படையாக கொண்ட சாதிய முறை ஒழிக்கப்பட்டு விட்டது. அதை ஆதரித்தோ, உயர்த்தியோ பேசுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும், பிரிவுகளுக்கும் எதிராக, தொடர்ந்து செயல்பட்டுவரும் அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் ஒற்றுமையைப் பாதிக்கும் வகையில் கடிதம், அறிக்கை மூலம் பதட்டத்தை உருவாக்கி, அமைதியைக் கெடுத்து, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சி செய்பவர்கள் மீது தமிழ் நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசும், அரசமைப்புச் சட்ட நிறுவனங்களும் (Constitutional Bodies) படைப்பாளிகள், கருத்தாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும், சமூக அமைதியைச் சீர்குலைக்க தூண்டப்படும் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முன்வரவில்லை என்றால், அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் என்ற தன் பொறுப்பின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து (suo moto) தனி மனித உரிமையைக் காத்திட, அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க உரிய வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும்.
மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சக்திகளை மக்கள் தனிமைப்படுத்த வேண்டும். சமமான கற்றல் வாய்ப்பு, சமமான மருத்துவ வசதி உள்ளிட்ட வாழ்வாதாரச் சிக்கல்கள் தீர, நமது உழைப்பு தேவைப்படுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கமான சமத்துவச் சமூகத்தைக் கட்டமைக்க, சாதியை நிராகரித்து, மதங்களைக் கடந்து, மனிதத்தை உயர்த்திப் பிடித்து, உழைக்கும் வர்க்கமாக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ் நாடு மக்களைக் கோருகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.