Aran Sei

இஸ்லாமியர்கள் குறித்து பாதிரியாரின் அவதூறு பேச்சு – பினராயி விஜயன் கண்டனம்

ஸ்லாமிய மதத்தைச் சாராத இளைஞர்கள் அடிப்படைவாத ஜிகாதிகளால் போதை பொருட்களுக்குக் குறிவைத்து  உள்ளாக்கப்படுவதாகக் கேரளாவைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார் தெரிவித்திருந்தார். இப்பேச்சுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 8 அன்று கேரளாவின் குரவிலங்காடு பகுதியில் உள்ள மார்த் மரியம் யாத்திரை தேவாலயத்தில்  நடந்த மதக்கூட்டத்தில்  பேசிய பிஷப் ஜோசப் கல்லரங்கட் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், அந்தக் கூட்டத்தில் பேசிய ஜோசப் கல்லரங்கட், “இரண்டு வகையான ஜிஹாத்துகள் உள்ளது. ஒன்று லவ் ஜிகாத் மற்றொன்று போதைப் பொருள் [நர்கோடிக்] ஜிகாத் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, “போதைப் பொருள் ஜிகாத்தின் காரணமாக இஸ்லாமியர் அல்லாத இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களின்  வாழ்வு பாதிக்கப்படுகிறது. அடிப்படைவாத ஜிகாதிகள் நடத்தும் ஐஸ்கிரீம் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் பழச்சாறு கடைகளில் பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அவர்கள் பல போதைப் பொருட்களை ஆயுதமாகக் கொண்டு இஸ்லாமியர்கள் அல்லாத இளைஞர்களின் வாழ்வைப் பாழடிக்கிறார்கள்”. என்று பிஷப் ஜோசப் கல்லரங்கட் கூறியிருந்தார்.

இதுகுறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “பிஷப் ஜோசப் இதுபோன்று பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். முதல்முறையாக கேரளாவில் போதைப்பொருள் ஜிகாத் என்ற வார்த்தை கேள்விப்படுகிறேன். ஒரு குறிப்பிட்ட மதத்தில் மட்டும் போதைப் பொருள் பிரச்சினை இல்லை.போதைப்பொருளைத் தடுப்பதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். உலகம் முழுவதுமே போதைப் பொருள் ஒழிய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்