Aran Sei

‘ஜனநாயகம் செழிக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ – இந்தியப் பத்திரிகையாளர் சங்கம்

மூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்கோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறி, இரு பெண் பத்திரிகையாளர்கள் மீது திரிபுரா காவல்துறை பதிந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் (பிசிஐ) கோரியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் நடந்த வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் குறித்து எழுத, ஹெச்டபல்யூ நியூஸ் நெட்வொர்க்கின் நிருபர்கள் சம்ரித்தி சகுனியா மற்றும் ஸ்வர்ணா ஜா ​​ஆகியோர் அம்மாநிலத்திற்கு சென்றபோது, அஸ்ஸாம்-திரிபுரா எல்லைக்கு அருகில் உள்ள கரீம்கஞ்ச் நீலம் பஜாரில் அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், அவர்கள் திரிபுராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சமூக ஊடகங்களில் போலியான செய்திகளையும் வெறுப்புணர்வை உருவாக்கும் பதிவுகளையும் பதிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, நேற்று முன்தினம்(நவம்பர் 16) காலை கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இருவரும் அன்று மாலையே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று(நவம்பர் 16), இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய பிரஸ் கிளப், “டெல்லியைச் சேர்ந்த இரண்டு பெண் நிருபர்களான சம்ரித்தி சகுனியா மற்றும் ஸ்வர்ணா ஜா ​​ஆகியோரை திரிபுரா மாநில காவல்துறை வகுப்புவாத வெறுப்பை பரப்பியதாகக் கூறி கைது செய்து துன்புறுத்தியதை பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. விஎச்பி ஆதரவாளர்கள் அளித்த புகாரின் பேரில், திரிபுராவில் உள்ள ஃபாடிக்ராய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சகுன்யா மற்றும் ஜா ஆகியோர் பெயர்கள் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

“வழக்குகள் கைவிடப்பட வேண்டும் என்றும் ஊடகங்கள் சுதந்திரமாக தங்கள் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா பிரஸ் கிளப் கோருகிறது. காவல் நிலையத்தில் மாலை 6 மணிக்கு மேல் பெண்களை காவலில் வைத்திருக்ககூடாது என்ற சட்டத்தை மீறி, இரவு வரை அவர்களை காவலில் வைத்திருந்த மனித உரிமை மீறும் இச்செயலை கவனத்தில் கொள்ளுமாறு தேசிய மனித உரிமை ஆணையத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளது.

மேலும், “திரிபுரா காவல்துறையினரால் ஊடகவியலாளர் ஒருவர் துன்புறுத்தப்படுவது இது முதல் முறையல்ல. திரிபுராவில் நடந்துக்கொண்டிருக்கும் கவலையளிக்கும் சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகம் செழிக்க, ஊடகங்கள் எந்த தொந்தரவும் இன்றி தங்கள் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று இந்தியா பிரஸ் கிளப் வலியுறுத்தியுள்ளது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்