Aran Sei

கொரோனா சூழலில் பண்டிகைகளை விட உயிர்களைக் காப்பது அவசியம்: உச்ச நீதிமன்றம்

Credits The Hindu

பட்டாசு விற்பனைக்குக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக் காரணத்தால் மேற்குவங்க மாநிலத்தில் காளி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்குப் பட்டாசுகள் விற்பனை செய்யவோ பயன்படுத்தவோ கூடாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அக்டோபர் 5-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கௌதம் ராய் என்பவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

“பண்டிகைகள் முக்கியமானவை என்பது உண்மைதான். ஆனால், நாம் இப்போது கொரோனா நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.  வேறு எதைக்காட்டிலும், உயிரைப் பாதுகாப்பதே தற்போது மிகவும் அவசியம்.” என்று நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

“கொரோனாவால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் உட்பட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கொல்கத்தா, டெல்லி அல்லது வேறு எந்த நகரத்திலாவது மக்கள் வீட்டை விட்டு வெளியே நடமாடக் கூடிய சூழல் உள்ளதா?” என விசாரணையின்போது நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பட்டாசுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றத்திடம் போதுமான தரவுகள் இல்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் சிதார்த் கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் அமர்வு, “வயோதிகர்கள் மற்றும் நோயாளிகளின் நலனை மேம்படுத்தக் கூடிய எல்லா முயற்சிகளும் வரவேற்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளதாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது.

தீபாவளி தவிர வரவிருக்கும் பிற பண்டிகைகளுக்காவது பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டின் மீதுள்ள தடையை நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதற்கும் நீதிபதிகள் அமர்வு மறுப்புத் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், மேற்குவங்க மாநிலத்தில் நவம்பர் மாத இறுதி வரை பட்டாசு விற்கவும் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

தடை உத்தரவை மீறி விற்கப்படும் பட்டாசு மற்றும் காற்றை மாசு படுத்தும் பிற பொருட்களைக் காவல்துறை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் போலவே கர்நாடகா, சண்டிகர், ஒடிஷா, சிக்கிம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்க்ரோல் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்