Aran Sei

எதிர்க் கட்சிகளைக் கொண்டு பாஜகவை தோற்கடிக்க முடியாது; புதிய வியூகங்கள் தேவை – பிரஷாந்த் கிஷோர்

ற்போதுள்ள எதிர்க்கட்சிகளையும் கூட்டணிகளையும் வைத்துக்கொண்டு, அடுத்த பொதுத்தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, என்டிடிவி செய்தி நிறுவனத்திற்கு  அவர் அளித்த நேர்காணலில், “பாஜகவின் புகழ் என்பது இந்துத்துவ செயல்பாடு மட்டுமல்ல. இது மிக முக்கியமான கூறுகளில் ஒன்று மட்டுமே. பாஜகவில் நாம் கவனிக்க வேண்டிய மற்ற இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று – மிகை தேசியவாதம். இது மிக முக்கியமானதும் இந்துத்துவாவைப் போல தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஆகும். இரண்டாவதாக நலவாழ்வு” என்று கூறியுள்ளார்.

“வீட்டு வசதி போன்ற தனிநபர் நல்வாழ்வுநிலை, தேசியவாதம் மற்றும் இந்துத்துவம். இவற்றை ஒன்றாகச் சேர்த்தால், அது மிகவும் வலிமையான ஒன்றாகி விடுகிறது. அண்மைய சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக சிறப்பாகச் செயல்படவில்லை. காரணம் என்னவென்றால், இந்த தேசியவாத முழக்கம் வேலை செய்யாமல் போனது. அம்முழக்கத்தை எதிர்ப்பதற்கு பிராந்தியவாதம் உள்ளது. ஆனால், தேசியளவிலான தேர்தல்கள் என்று வரும்போது, ​​இந்தத் தேசியவாதம் முழக்கங்கள் கடந்து தோல்விகளை மறக்கடித்து அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“2024 இல் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைக்கு உதவ விரும்புகிறேன். அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்பட்டாலும், அவற்றில் பாஜகவிற்கு சாதகமான முடிவுகள் கிடைத்தாலும், நம்மால் அடுத்த பொதுத் தேர்தலில் பாஜகவை அகற்ற முடியும். அவற்றுக்கு சாத்தியங்கள் உள்ளன” என்று பிரஷாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.

“2024 இல் பாஜகவைத் தோற்கடிப்பது சாத்தியமா என்றால்? சாத்தியம் என்பதுதான் பதில். ஆனால், தற்போதுள்ள எதிர்க்கட்சிகளால், கூட்டணிகளால் அது சாத்தியமா? இல்லை என்ற பதிலைதான் சொல்ல முடியும். 2015 பீகார் தேர்தலுக்குப் பிறகு ஒரு மகா கூட்டணி கூட வெற்றிபெறவில்லை. கட்சிகளையும் தலைவர்களையும் ஒன்றுத்திரட்டுவது மட்டும் போதாது. உங்களிடம் ஒரு நெரேட்டிங் (பெரும் உரையாடல்) இருக்க வேண்டும். ஒத்திசைவான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“பாஜகவை தோற்கடிக்க விரும்பும் எந்தக் கட்சிக்கும் அல்லது தலைவருக்கும் 5-10 ஆண்டுகளுக்கான கண்ணோட்டம் இருக்க வேண்டும். ஐந்து மாதங்களில் அவற்றை செய்துவிட முடியாது. ஆனால், பாஜகவைத் தோற்கடிக்க முடியும். அதுதான் ஜனநாயகத்தின் சக்தி” என்று என்டிடிவி பிரஷாத் கிஷோர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் நடவடிக்கைக் குழு (ஐ-பேக்) என்ற பெயரில், தேர்தல் பரப்புரைகள் குறித்த ஆலோசனைகள் தரும் நிறுவனத்தின் தலைவராக பிரஷாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிறுவனம், 2011 ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடிக்கு பரப்புரை வேலைகளைச் செய்துக்கொடுத்தது. அதைத்தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜகவின் தேர்தல் பரப்புரைகளை முழுமையாக பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து, அக்கட்சி வெற்றி பெற குறிப்பிடத் தகுந்த அளவிற்கும் உதவியது.

அண்மைய சட்டபேரவை தேர்தல்களில், தமிழ்நாட்டில் திமுகவிற்காகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காகவும் தேர்தல் ஆலோசகர் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இருகட்சியும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மேலும், பஞ்சாபில் கேப்டன் அமரீந்தர் சிங், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி போன்றோரின் வெற்றிக்கும்,  பிரஷாந்த் கிஷோர் பணியில் ஈடுபட்டு வந்தார்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்