Aran Sei

கொரோனா பரவுவதால் உ.பி.தேர்தலை தள்ளி வையுங்கள் பேரணிகளுக்கு தடைவிதியுங்கள் – பிரதமர் மோடிக்கு உயர்நீதிமன்றம் வேண்டுகோள்

மைக்ரான் பரவல் அச்சத்தால் உத்தரப்பிரதேச தேர்தலை காலதாமதப்படுத்தி நடத்துங்கள். தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகளுக்கு தடை விதியுங்கள் என்று பிரதமர் மோடிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறும்போது, “ஒமைக்ரான் பரவலால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் 3-வது அலையை எதிர்கொள்வோமா என்ற அச்சம் இருக்கிறது. சீனா, நெதர்லாந்து,ஜெர்மனி போன்ற நாடுகளில் முழுமையான ஊரடங்கு  அல்லது பகுதி ஊரடங்கை பிறப்பித்து கொரோனாவை கட்டுக்குள் வர முயல்கிறார்கள்.

இரண்டாவது அலையில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர், பலர் உயிரிழந்தனர். உ.பி.யில் நடந்த கிராமபஞ்சாயத்து தேர்தல், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் கொரோனா தொற்று அதிகரித்தது. தொற்று அதிகரிக்க இந்த இரு தேர்தல்களும் காரணாக இருந்தன.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அப்போது தேர்தல் பிரச்சாரங்கள், அரசியல்கட்சிக் கூட்டங்கள், பேரணிகள் நடக்கும். இதனால், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தேர்தல் நேரத்தலில் யாரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றமாட்டார்கள், சமூக விலகலையும் பின்பற்றமாட்டார்கள்.

ஆதலால், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தேர்தலை ஒத்திவைக்கலாம், தேர்தல் காலங்களில் அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கலாம். சரியான நேரத்தில் இவற்றைதடுத்து நிறுத்தாவிட்டால், 2-வது அலையைவிட மோசமான விளைவுகளைச் சந்திக்கலாம்.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள் நடத்த தேர்தல்ஆணையம் தடைவிதித்து, வானொலி, தொலைக்காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய உத்தரவிட வேண்டும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தலை நடத்துவதாக இருந்தால், அதை 2 மாதங்கள் ஒத்திவைக்கலாம். உயிர் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் நடத்த முடியும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் வாழும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி செய்து பிரச்சாரங்கள், முயற்சிகளுக்கு பாராட்டுகள். கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த பிரதமர் மோடியை நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

source: indianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்