Aran Sei

‘மாப்ளா போராட்ட தியாகிகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் நினைவு கல்வெட்டு அமைத்திடுக’ – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தல்

மாப்ளா போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கோவை மத்திய ரயில் நிலையத்தில் நூற்றாண்டு கல்வெட்டு அமைக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தின பொன்விழாவை கொண்டாடிவரும் சூழலில் நமது சுதந்திரத்திற்காக சொல்லொண்ணா துயரங்களையும் கஷ்டங்களையும் சந்தித்து தங்களின் உயிரையும் தேசத்தின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்த நம் முன்னோர்களை நினைவுகூர்வதிலும், போற்றுவதிலும் நாம் இன்னும் சிறுமை உடையவர்களாகவே இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக தற்போதைய ஆட்சியாளர்கள் இஸ்லாமியர்களுக்கும், இந்திய விடுதலைக்கும் உண்டான பிரிக்கமுடியாத வரலாற்றுப் பக்கங்களை திரித்துக் கூறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் நாம் நம் முன்னோர்களின் தியாகத்தின் நூற்றாண்டை இன்று நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 1

மாப்பிளா இஸ்லாமியர்கள் காலனியாதிக்க ஆங்கிலேயர்களாலும், ஜென்மிகளாலும் கொடூரமான முறையில் ரயில் பெட்டியில் அடைத்துப் படுகொலை செய்யப்பட்ட நாள் நவம்பர் 19, 1921 ஆகும். இன்றோடு ஒரு நூற்றாண்டை கடந்த பின்பும் அந்நிகழ்வை வாசிக்கும்போது யார் கண்ணில் இருந்தும் கண்ணீர் வராமல் இருக்காது. அப்படியொரு கொடூரமான நிகழ்வு அனைவரது மனங்களிலும் ரணமாக இருந்து கொண்டிருக்கிறது.
1921 நவம்பர் 19 அன்று மாலை கோழிக்கோடு ரயில்நிலையத்தில் பயணிகள் வண்டி எண்:77 இல் சரக்குகளை ஏற்றிச்செல்லும் 1711 என்கிற எண்ணுள்ள பெட்டியொன்று இணைக்கப்பட்டு வண்டி திரூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அதில் கேரளாவின் மலபார் பகுதிகளில் இருந்து நடத்தியே இழுத்துவரப்பட்டிருந்த நூறு கைதிகளை ஒரு கைதியை மற்றொரு கைதியுடன் ஜோடியாகப் பிணைத்து, விலங்கிட்டு அந்தச் சரக்குப்பெட்டிக்குள் நூறு பேரையும் துப்பாக்கிமுனையால் திணித்துப் பூட்டி கொள்ளளவினும் பன்மடங்கு மிகுதியாயிருந்த அவர்களை அடைத்தனர்.

மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 2

திரூரில் கிளம்பிய வண்டி 111 மைல் கடந்து நள்ளிரவு 12.30 மணிக்கு போத்தனூரில் நின்றபோது அந்தப் பெட்டியைத் திறந்ததும் 56 பிணங்கள் வெளியே விழுந்திருக்கின்றன. போர்க்களத்தில் சிதைக்கப்பட்டவை போன்றிருந்த அந்தப் பிணங்கள் திரூருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. குற்றுயிருராக எஞ்சியிருந்த 44 பேர் கோவை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிலும் 14 பேர் அடுத்தடுத்த நாட்களில் மாண்டு போயினர். தென்னிந்தியாவின் “ஜாலியன் வாலாபாக்” என்று அழைக்கப்பட்ட இந்த படுகொலையை கிழக்கிந்தியக் கம்பெனியினர் நடத்தினர்.

ஆங்கிலேயர்கள் இயற்றிய நிலம்சார் சட்டங்கள் குத்தகைதாரர்களுக்கு எதிரானவையாக இருந்தன. எனவே குத்தகைதாரர்கள் நிலவுடமைத்துவத்தையும் காலனியாட்சியையும் எதிர்த்துப் போராடினர். உக்கிரமமாய் தொடர்ந்த இப்போராட்டத்தை, கிலாபத் இயக்கத்திலும், ஒத்துழையாமை இயக்கத்திலும் இணைத்ததன் மூலம் மாப்பிளாக்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுசேர்த்தனர். விவாகரத்து செய்துவிட்டு போராட்டத்தில் பங்கெடுக்க ஆண்கள் சென்றார்களென்றால் பெண்களோ ஆங்கிலேயப் படையினரை விரட்ட கொதிக்கும் எண்ணெய்யுடன் கதவோரம் காத்திருந்தார்கள். மலபாரின் ஒவ்வொரு அங்குலத்திலும் தம்மை எதிர்த்துப் போராடியவர்களை நரவேட்டையாடியது காலனியாட்சி. இதற்கெனவே அப்பகுதியில் ராணுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

மாப்ளா போராட்டமும் சில குறிப்புகளும் – பகுதி 3

மாப்பிளாக்களின் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது அங்கு 2,339 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்; 1,652 பேர் கடுமையாக காயமுற்றிருந்தனர்; 39,348 பேர் சரணடைந்தனர்; 7,900 பேர் அந்தமானுக்கு கடத்தப்பட்டனர் என்று பன்மடங்கு குறைத்து கணக்குக் காட்டப்பட்டது. இவர்களினூடாக பிடிக்கப்பட்ட நூறுபேரை 1921 நவம்பர் 19 அன்று திரூரிலிருந்து பெல்லாரி சிறைக்கு சரக்குப்பெட்டிக்குள் அடைத்து அனுப்பும்போதுதான் அவர்களில் 70 பேர் இறந்துபோனார்கள். இவர்களில் 67 பேர் மாப்ளா இஸ்லாமியர்கள், மூவர் இந்துக்கள்.

விடுதலைப் போராட்டத்தில் மாப்பிளா கிளர்ச்சியாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ரயில் வேகன் படுகொலையின் வரலாற்றை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களும் கட்டிடங்களும் திரூரில் எழும்பின. அங்குள்ள ரயில் நிலையத்தின் சுவர்களில் இப்படுகொலையின் வரலாற்றைச் சித்தரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டன. “1921” என்று பெயரிட்டு திரைப்படமும் வெளியானது. ரயில் வேகன் படுகொலையின் நூறாண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது.

மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 4

எனவே, தமிழ்நாடு அரசு மாப்பிளா இஸ்லாமியர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும் அடுத்த தலைமுறைக்கு நம் தேசத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளை அடையாளப்படுத்தும் விதமாகவும் ரயில் வேகன் படுகொலையில் ஒரு பகுதியாக அமைந்த கோவை மத்திய ரயில்நிலையத்தில் நூற்றாண்டு கல்வெட்டு அமைக்கவும் அதில் உயிர் நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரை பதிவு செய்யவும் ஆவண செய்யுமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக தமிழ்நாடு மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்