Aran Sei

‘பெல், எண்ணூர் ஆலைகள் இருக்க, வேதாந்தாவிற்கு மட்டும் அனுமதி என்பது மக்கள் விரோதம்’ – பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

திருச்சி பெல் நிறுவனம், எண்ணூர் தெர்மல் பிளான்ட் உள்ளிட்ட பல்வேறு ஆலைகள் ஆக்சிஜன் தயாரிக்கக் கோரி வழக்குப் போடாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவு எதுவும் ஏற்கப்படாததும் சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 27), ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் இந்த விவாகரம் குறித்து அறிந்த இரண்டு அரசு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், தமிழகத்தைச் சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்களைக் குழுவுக்குப் பரிந்துரைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களிலிருந்து 2 பேரைக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கலாம். அவர்கள் 48 மணி நேரத்தில் தேந்தெடுக்காவிட்டால், தமிழக அரசு அவர்களைத் தேந்தெடுக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன், “தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை அரசுடைமை ஆக்கி, நம்மிடம் உள்ள பெல், சேலம் உள்ளிட்ட ஆலைகளில் உள்ள பொறியாளர்கள், நிபுணர்களை வைத்து இயக்கலாம் என்று சொன்னோம்.” என்று கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் செயல்பட அனுமதி; தமிழகம் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

“ஆனால், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தமிழக அரசு, ஆலையை அவர்களே இயக்கலாம். நிபுணர் குழுவை அமைக்கும் அரசு என்று கூறியது. தமிழகத்தின் தேவை போக மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அளிக்கும் என்று தீர்மானம் போட்டார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் எதையுமே ஏற்கவில்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஆக்சிஜனைத் தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும், மத்திய அரசே நிபுணர் குழுவை அமைக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மக்கள் நலன் சார்ந்த தீர்ப்பல்ல. வேதாந்தா நிறுவனம் சார்ந்த தீர்ப்பு. இதுவரை அரசுடைய வேறு எந்த ஆலைக்கும் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான வழக்கு எதுவும் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை.” என்று சுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி – அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் கருத்து

“திருச்சி பெல் ஆலை மூடிக் கிடக்கிறது. அங்கு ஆக்சிஜன் உற்பத்தி நடக்கவில்லை. சென்னையில் எண்ணூர் தெர்மோ பிளான்ட்டில் ஆக்சிஜன் ஆலை உள்ளது. அதைத் திறக்கச் சொல்லி யாரும் நீதிமன்றம் செல்லவில்லை. பல இடங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான ஆலைகள் இருக்கும்போது வேதாந்தா நிறுவனத்துக்காக மட்டும் சென்று தீர்ப்பை வாங்கியுள்ளது நிச்சயமாக மக்களுக்கு விரோதமானது. மாநில அரசுக்கு விரோதமானது.” என்று அந்த நேர்காணலில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “உடனடியாகத் தமிழக அரசு, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை அரசுடைமையாக்க வேண்டும். நமது பொறியாளர்களை வைத்து ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கவும், அங்குள்ள காப்பர் பிளான்ட்டைச் செயலிழக்கவும் செய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும்.” என்று ‘பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் ஆலோசனை அளித்துள்ளார்.

Source : Tamil Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்