Aran Sei

நியூட்ரினோ திட்டத்திற்கான டாடா நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

நியூட்ரினோ திட்டத்திற்கு காட்டுயிர் அனுமதி கேட்கும் டாடா நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள்வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ துகள்கள்குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்துத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்றும் ஆனால், தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியில்லாமல் (NBWL) திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்கிற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மே 20ஆம் தேதி இத்திட்டத்திற்கான காட்டுயிர் வாரிய அனுமதிகோரி தமிழ்நாடு அரசின் வனத்துறையிடம் டாடா அடிப்படை அறிவியல்  ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் என்றும், இத்திட்டத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி Category A யின் கீழ்தான் பரிசீலிக்க முடியும் என்று அப்போதைய மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) கூறிய போதிலும் திட்டத்தை வெறும் கட்டுமானம் கட்டும் பிரிவில் அதாவது Category B என்று மாற்றி தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று அறிவித்து நேரடியாக ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருந்தது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: மதவாத பாசிசத்தை எதிர்பவர்களை ஒடுக்கும் பாஜகவுக்கு கிடைத்த சவுக்கடி என வைகோ கருத்து

இந்நிலையில், “மாநில அரசிடம் காட்டுயிர் வாரிய அனுமதி கோரப்பட்டிருக்கும் இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் எனவும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கின்ற வனத்துறை அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்படும் வகையில் தீர்ப்பைப் பெறவும் தமிழ் நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்த அறிக்கை வாயிலாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்