Aran Sei

பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்வு: புதிய இடஒதுக்கீட்டின்படி நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

ல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு  புதிதாக ஏற்பட்ட காலியிடங்களையும்  சேர்த்து, புதிய இட ஒதுக்கீட்டு விதிகளின்படி ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அறிவிக்கை கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, அதே ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்தத் தேர்வுகளில் 196 மாணவர்களின் மதிப்பெண்கள் முறைகேடாக உயர்த்தி  பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டித் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப் பட்டது”. என்று குறிப்பிட்டுள்ளார்.

அதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைப்படி பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் 1060 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு 27.11.2019 அன்று அறிவிக்கப்பட்டது. அத்தேர்வுகள்  2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வாரியம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகளாகிவிட்ட சூழலில் அப்போது விண்ணப்பித்தவர்களை மட்டும் கொண்டு, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டால், அது அந்தப் பணிக்குக் கடந்த இரு ஆண்டுகளில் தகுதி பெற்றவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாக அமைந்து விடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இப்போட்டித் தேர்வு நடத்தப்பட்டால், அதற்குப் பிறகு தகுதி பெற்ற ஒரு லட்சத்திற்கும் கூடுதலானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, 26.07.2021 அன்று தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வன்னியர் 10.50%  இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தப்பட்ட 26.02.2021-ஆம் நாளுக்குப் பிறகு அறிவிக்கை செய்யப்படும் அனைத்து பணி நியமனங்களிலும் புதிய இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்து விட்டு,  புதிதாக ஏற்பட்ட காலியிடங்களையும்  சேர்த்து, புதிய இட ஒதுக்கீட்டு விதிகளின்படி ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்