Aran Sei

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ பயத்தில் பிதற்றும் ஜெயராமன் – ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் பணம் கேட்டும் மிரட்டியும் வந்த கும்பல், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், காவல்துறையால் கைது செய்யப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த குற்றச்செயல், மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் , வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய செல்போன்களில், பல பெண்களைத் துன்புறுத்தும் வீடியோக்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக, அதிமுகவின் அம்மா பேரவைச் செயலாளர் ‘பார்’ நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் தனியாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பார் நாகராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பார் நாகராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த குற்றச்செயலில் அதிமுகவினருக்கு தொடர்பிருப்பதாகவும், குற்றவாளிகளை ஆளும் கட்சி காப்பற்ற முயற்சி செய்வதாகவும், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்த வழக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. ஆனால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பல்வேறு தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கும் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதே கருத்தை திமுக தலைவர் ஸ்டாலினும் கூறியுள்ளார். இது குறித்து பேசிய ஜெயராமன் “என் மகனுக்கும் பொள்ளாச்சி சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காவல் துறையைத் தொடர்பு கொண்டு பொள்ளாட்சி வன்கொடுமை வழக்கை தொடர செய்தது நான்தான்” என்று கூறிய அவர். தன்மகன் குற்றவாளி என்று நிரூபித்தால் 50 ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையிலிருந்து விலக தயார் என்றும் அவ்வாறு முடியாவிட்டால் கட்சிப் பதவியிலிருந்து திமுக தலைவர் ஸ்டாலின் விலகத் தயாரா என்று பொள்ளாச்சி ஜெயராமன் சவால் விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்துக்கு பதிலளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி “‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்கிற பழமொழிக்கு ஏற்ப பொள்ளாச்சி ஜெயராமன் வாய் சவடால் அளித்திருக்கிறார். கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களைப் பற்றி பொறுப்பற்ற முறையில் இவர் தொடர்ந்த வழக்கில், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் (எழுத்துப் பூர்வமாக எந்தவிதான) இந்த வழக்கு குறித்து எதுவும் பேச மாட்டேன் என்று எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்பதை இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல சி.பி.ஐ. விசாரணை என்றவுடன் மிரண்டு போயிருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் தவறான தகவல்களை பொது வெளியில் பேசியிருக்கிறார்”  என்று கூறியுள்ளார்.

மேலும், “‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது போல’ இவர் மகன் குற்றமற்றவர் என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களைப் பதவி விலக சொல்வது என்பது, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மேற்கு மண்டலத்தில் பெருகிவரும் செல்வாக்கை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக பிதற்ற ஆரம்பித்து விட்டார். சி.பி.ஐ. விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பிறகு தான் யார்? யார்? இந்த கொடூரமான சம்பவத்தில் பங்கு பெற்றவர் என்பது வெளிச்சத்திற்கு வரும்” என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்