Aran Sei

‘நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு; கொலிஜியம் முறையை மாற்ற வேண்டும்’ – திருமாவளவன்

யர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதால் கொலிஜியம் முறையை கைவிட்டு வெளிப்படைத்தன்மையோடு இயங்கக்கூடிய முறையை கொண்டு வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் நியமனம் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய திருமாவளவன், ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் நீதித்துறை மிக முக்கியமான ஒன்று. நீதித்துறை எத்தகைய குறுக்கீடுகளும் அரசியல் தலையீடுகளும் இல்லாமல் சுதந்திரமாக இயங்குவதற்கு உரிய வழிவகைகளை காணவேண்டும். உயர் நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் தற்போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. அதனால்தான் பல்லாயிரக் கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கிற நிலையை நாம் பார்க்கிறோம்.

வாரணாசியில் மோடியின் வருகைக்காக காவி சாயம் பூசப்பட்ட மசூதி – எதிர்ப்பு வலுத்ததால் வெள்ளை நிறம் அடித்த மாவட்ட நிர்வாகம்

எனவே, உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும்  நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகளை நியமனம் செய்வதில் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும். அதற்குத் தனியே சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்.

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு எதிரொலி: எல்லை பாதுகாப்பு படையினரை காவல்துறை கண்காணிக்க வேண்டும் – மம்தா பானர்ஜி

இந்தியா மிகப் பெரிய பரந்த தேசம் உச்சநீதிமன்றம் புதுதில்லியில் இருப்பதனால் தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை நடத்த வேண்டுமென்றால் தூரமும் காலமும் மிகப்பெரிய அளவில் சிக்கலாக இருக்கிறது. எனவே தென்னிந்திய பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையை ஒன்றை உருவாக்குவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். ஹைதராபாத்தில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை ஏற்படுத்தித்தர வேண்டும். உயர் நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதை உடனடியாக நிரப்ப வேண்டும். நீதிபதிகள் நியமன முறை ஜனநாயக நெறி முறைப்படி இல்லை. அதனால் கொலிஜியம் முறையை ரத்து செய்துவிட்டு ஜனநாயக முறைப்படி வெளிப்படைத்தன்மையோடு இயங்கக்கூடிய நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும். நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்வதற்கு மிகப்பெரிய அளவில் தலையீடுகள் இருக்கின்றன; அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மாற்றப்பட்டார். மிகப்பெரிய உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய அவரை எந்த அதிகாரமும் இல்லாத சிறிய மாநிலமான மேகாலய மாநிலத்தில் பணியிட மாற்றம் செய்தது மிகப்பெரிய அநீதியாகும்.

எனவே இந்த முறையை மாற்றி முற்றாகக் கைவிட்டு ஜனநாயக முறைப்படி வெளிப்படைத்தன்மை இயங்கக்கூடிய நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்