Aran Sei

காவல்துறை விசாரணையில் வியாபாரி மரணம் – சாத்தான்குளத்தை தொடர்ந்து மற்றொரு நிகழ்வு

விசாரணைக்காக அழைத்துச் சென்ற வியாபாரியை போலீஸ் தாக்கியதால் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி திரு.செல்வம் என்பவரை அக்டோபர் மாதம் 28ஆம் தேதி வழக்கு ஒன்றுக்காகச் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்ற காவல்துறையினர் செல்வத்தை நெய்வேலி நகர காவல்நிலையத்திலும் பின்னர் தனியார் விடுதியிலும் இரண்டு நாட்கள் தங்க வைத்து மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான காயங்களுடன் அவர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், காவல்துறையினரின் தாக்குதலால் படுகாயமடைந்திருந்த அவர் 04-11-2020 அன்று சிறையிலேயே மரணம் அடைந்ததாகவும் ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இறந்த அவரது உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவமனையில் இறந்ததாக கூறி போலீசார் நாடகமாடுவதாக அவரது உடலை வாங்க மறுத்து  விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கணவனின் மரணத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்குச் செல்வத்தின் மனைவி பிரேமா புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

“விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகன், காவலர்கள் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகத் தெரிவித்திருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை மேற்கொள்ளவும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுவதாக” பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மறுமலர்ச்சி திராவிடர் கழகத் தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “வெவ்வேறு மருத்துவக்கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உடல்கூறு ஆய்வு செய்ய வேண்டும்; அப்போது, செல்வமுருகன் உறவினர் ஒருவர் உடன் இருக்க வேண்டும்; உடல்கூறு சோதனைகளை காணொளிப் பதிவு செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“காணொளிப் பதிவின் ஒரு பிரதியை, பிரேமாவிடம் வழங்க வேண்டும்; நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது, கொலை வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணை செய்ய வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் போலீஸ் காவலில் உயிரிழந்தனர். தமிழகத்தையே உளுக்கிய இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்