சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காவலர் அடித்ததில் முருகேசன் என்பவர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகாரளித்துள்ளனர்.
சோதனைச் சாவடியில் காவலர்களுக்கும் முருகேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், காவல்துறை உதவி ஆய்வாளர் பெரியசாமியும் அவரோடு இருந்த காவலர்களும் முருகேசனை தாக்கியிருக்கிறார்கள். இதில் அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த 11 மாவட்டங்களில் இருப்பவர்கள் அருகில் இருக்கும் மாவட்டங்களுக்குச் சென்று டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கி வருகிறார்கள்.
மது வாங்கி வருவதை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் ஆங்காங்கு சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே இருக்கக்கூடிய பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இருக்கக்கூடிய இடையப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவருடைய இரு நண்பர்கள் அருகில் இருக்கக்கூடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை என்ற கிராமத்தில் இருந்து மது அருந்திவிட்டு, பின்னர் கல்வராயன்மலை வழியாக வீடு திரும்பி இருக்கிறார்கள்.
அப்போது, ஆத்தூர் அருகே இருக்கின்ற பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் போலீசார் வாகனங்களை தடுத்து சோதனை செய்து கொண்டிருந்த போது இவர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். போதையில் இருந்த இவர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அருகில் இருந்து பார்த்த ஒருவர், காவல்துறை உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனை தாக்கக்கூடிய காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனை அடுத்து முருகேசனை வாழப்பாடி அருகே இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு நண்பர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் தாக்கியதால் தான் முருகேசன் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. காவல்துறை முருகேசனை தாக்கிய காணொளி பரவல் காரணமாகத் தற்பொழுது காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்.
சம்பவம் நடந்த இடத்தில் அதிகளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணையில் இறங்கி இருக்கிறார். தற்போது முருகேசனை தாக்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது தொடர்புகொள்ள முடியவில்லை.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.