Aran Sei

காவல்துறையின் என்கவுண்டர்கள் ஆபத்தானது; நீதித்துறைக்கு எதிரானது – தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு

காவல்துறையின் போலிமோதல் (என்கவுண்டர்) கொலைகள் ஆபத்தானது என்றும் நீதித்துறைக்கு எதிரானது என்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அக்டோபர் 10 ஆம் தேதி தமிழக காவல்துறையானது காஞ்சிபுரம் மாவட்டம் அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 வட மாநிலத்தைச் சார்ந்த நபர்களைத் துரத்திச் சென்று பிடிக்க முற்பட்டதாகவும் அந்த நபர்கள் காவல்துறை மற்றும் பொதுமக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது, அதனைத் தொடர்ந்து காவல்துறையால் நடத்தப்பட்ட போலி மோதல் (என்கவுண்டர்) தாக்குதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த முர்தஸா ஷேக் என்பவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் மற்றொரு நபரான நயீம் அக்தர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் உண்மையாகவே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் அவர்களை கைது செய்யவோ சட்டப்படி விசாரணை செய்து நீதிமன்றத்தின் முன் நிற்க வைத்து தகுந்த தண்டனை பெற்றுத் தருவதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதுவே காவல்துறையின் கடமையும் ஆகும்.

ஆனால், காவல்துறை சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு குற்றவாளிகளைத் தண்டிப்பதை ஏற்று கொள்ள முடியாது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கும், சட்டத்திற்கும் எதிரானது. சாதாரண குடிமக்களுக்கும் இது ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது. எனவே பல்வேறு என்கவுண்டர் வழக்குகளில் உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் என்கவுண்டர் வழக்குகளை மிக கடுமையாக கண்டித்துள்ளது. காவல் துறையைச் சார்ந்த பல காவலர்களுக்குத் தண்டனையும் வழங்கி உள்ளது. எனவே ஸ்ரீபெரும்புதூரில் போலிமோதல் (என்கவுண்டர்) கொலை செய்த காவல்துறை மீது தகுந்த விசாரணை நடத்தி முறையான நீதியைப் பெற்றுத் தருமாறு தமிழக காவல்துறையை கேட்டுக்கொள்வதோடு, மேற்கொண்டு இதுபோன்ற என்கவுண்டர் முறைகளை தமிழக டிஜிபி அவர்களும், தமிழக அரசும் ஊக்குவிக்காமல் போலிமோதல் (என்கவுண்டர்) கொலைகளை ஒழித்து, சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்