Aran Sei

கேரளா காடுகளில் மீண்டும் ஒரு ” மோதல் ” – மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் Image Credit : newindianexpress.com

கேரளா வயநாட்டில் உள்ள படிஞ்சரதரா காட்டில் மாவோயிஸ்ட் என்று சந்தேகப்படும் ஒருவரை சுட்டுக் கொன்றதாக கேரளா போலீஸ் அறிவித்துள்ளது. “இந்த மோதல் தண்டர்போல்ட் கமாண்டோக்களின் (அதிரடிப்படை) குழுவும் உள்ளூர் போலீசும் இணைந்து மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் நிகழ்ந்தது” என்று தண்டர்போல்ட் மாநிலத் தலைவர் சைத்ரா தெரசா ஜான் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியிருக்கிறார்.

அதிரடிப்படையினர் மாவோயிஸ்டுகளை எதி்ர்பாராத விதமாக சுற்றி வளைத்ததாகவும், அந்தக் குழுவை சரணடையும்படி கூறியதாகவும் செய்தி தெரிவிக்கிறது. ஆனால், அடர்த்தியான புதர்களில் இருந்து துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டதாக போலீசார் கூறியிருக்கின்றனர்.

மாவோயிஸ்டுகளை தப்ப முடியாமல் அதே இடத்தில் வைத்திருந்து சரணடையச் செய்வதற்காக அதிரடிப்படையினர் திருப்பிச் சுட்டதாகவும், ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் பின் வாங்கி காட்டுக்குள் மறைந்து விட்டதாகவும், கொல்லப்பட்ட ஒருவரை விட்டுச் சென்றதாகவும் தகவல் கிடைத்ததாக தி ஹிந்து செய்தி கூறுகிறது.

இன்று விடியற்காலை 4.30 மணியளவில் தொடங்கிய இந்த மோதல் காலை 7 மணி வரை நீடித்திருக்கிறது. நடந்ததாகச் சொல்லப்படும் துப்பாக்கி சண்டையில் அதிரடிப்படையினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

தங்களது சுற்றிவளைப்பிலிருந்து தப்பித்து தமிழ்நாடு, கர்நாடகா வனப்பகுதிகளுக்குள் தப்பிச் சென்று விட்ட பிற தீவிரவாதிகளை தண்டர்போல்ட் அதிரடிப் படையினர் துரத்தி வருகின்றனர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் உறுப்பினரின் உடலை வயநாடு போலீஸ் சம்பவ இடத்திற்குச் சென்று பெற்றுக் கொண்டது. சம்பவ இடத்தில் இருந்து ஒரு போல்ட் ஆக்ஷன் துப்பாக்கியையும், தாக்குதல் துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளையும் அதிரடிப் படையினர் கைப்பற்றியதாக செய்தி கூறுகிறது.

தண்டர்போல்ட் என்பது மாவோயிஸ்டுகளை எதிர்த்து போரிடுவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவு ஆகும். இந்த ரோந்துக் குழு ஒன்று பாணாசுரா சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இந்தத் தீவிரவாதிகளை எதிர் கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. முதலில், ஒரு மாவோயிஸ்ட் சுடப்பட்டார் என்று செய்திகள் வெளியாயின, பின்னர், அவர் காயங்களுக்கு பலியானார் என்று உறுதி செய்யப்பட்டது என்று செய்தி கூறுகிறது.

உயர்ந்த மலைப்பகுதிகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)-ன் கபாலிதளம் இந்தப் பகுதியில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்ற ஆண்டு மாவோயிஸ்ட் சி பி ஜலீல் மோதல் என்று சொல்லப்படுவதில் கொல்லப்பட்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. இது தொடர்பான புலனாய்வு அறிக்கை ஒன்று மோதல் என்ற போலீசின் கதையில் பல ஓட்டைகளை கண்டறிந்தது.

அக்டோபர் 2019-ல் கேரளா போலீஸ் ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றது போலி மோதல் கொலை என்று கேரளாவில் ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. இது “ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட சட்ட விரோதமான படுகொலை” என்று அக்கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது.

மாவோயிஸ்டுகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சரணடைவதற்குக் கூட வாய்ப்பு கொடுக்காமல் அதிரடிப்படை சுட்டுக் கொன்றதாக, உண்மை அறியும் குழு அறிக்கை குற்றம் சாட்டியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்)-ஐச் சேர்ந்த முதல்வர் பினரயி விஜயனின் அரசு, “எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மாவோயிஸ்டுகளை கொல்வதற்கு மாநில போலீசிற்கு சுதந்திரம் கொடுத்துள்ளது” என்று எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்திருந்தார். உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்