Aran Sei

அன்புமணி ராமதாசிடம் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரை மிரட்டிய பாமக தொண்டர்கள்

சென்னையில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தின் போது  ரயில் மறிப்பு மற்றும் கல் வீச்சு செய்தது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்களை பாமக தொண்டர்கள் மிரட்டியுள்ளனர்.

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ”முதல்கட்ட போராட்டம் சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு டிச.1-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அடுத்தகட்டமாக கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மக்கள்திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் என பல நிலைகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் மாபெரும் நிறைவுகட்ட போராட்டம் அடுத்த சில வாரங்களில் நடக்கவுள்ளது” என கூறியுள்ளார்.

பாமக போராட்டம் – முடங்கியது சென்னைப் புறநகர்ப் போக்குவரத்துச் சாலைகள்

“ நமது கோரிக்கைகளுக்கும், உன்னத நோக்கங்களுக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய எந்த செயல்களுக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது” என்று மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று போராட்டத்திற்காக வந்த பாமக தொண்டர்களுக்கு சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து ரயிலை மறித்து, கற்களை வீசியுள்ளனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ரயில் மறிப்பு, கற்கள் வீச்சு – தொடங்கியது பாமக இடஒதுக்கீடு போராட்டம்

இந்தப் போராட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்ள முடியாமல் போனது குறித்து மருத்துவர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் ”என் உடல் மட்டும் தான் தைலாபுரத்தில் உள்ளது உயிரும், உள்ளமும்  சென்னை போராட்டக்களத்தில் தான் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.

வன்னிர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம் நல்ல முடிவு எடுப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்” என அன்புமணி ராமாதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார

அப்போது பாமகவினர் ரயிலில் கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், பாமக தொண்டர்கள் அறவழியில் தான்  போராட்டம் நடத்தியதாக கூறிய அவர் இதை யாரோ செய்ததாக தெரிவித்தார். ஆனால் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் பாமகவினரின் கொடி, டிசர்ட் அணிந்து இருந்தது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, அன்புமணி ராமதாஸ் பதில் தெரிவிக்காமல் செய்தியாளர்கள் சந்திப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

அப்போது, அன்புமணியுடன் வந்திருந்த சிலர் பத்திரிகையாளர்களை பார்த்து நாக்கை கடித்து, கையை  உயர்த்தி  மிரட்டியுள்ளனர். உடனே பத்திரிகையாளர்கள், இதுகுறித்து அன்புமணியிடம் தெரிவிக்க அவருடைய கார் அருகே சென்றுள்ளனர். ஆனால், பத்திரிகையாளர்களின் பேச்சை கேட்க மறுத்த அன்புமணி தனது ஓட்டுனரை உடனே காரை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். ஓட்டுனர் காரை வேகமாக எடுக்க, கார் சக்கரம் ஜெயா டிவி ஒளிப்பதிவாளர் ஒருவரின் காலில் ஏறியிறங்கியுள்ளது. இதனால் அந்த ஒளிப்பதிவாளருக்கு காலில் தசை விலகல் ஏற்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இது குறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் விடுத்துள்ள அறிக்கையில் “கேள்விக் கேட்பது ஒரு பத்திரிகையாளனின் கடமை. அந்த கேள்விக்கு பதில் அளிப்பதும், பதில் அளிக்காததும், அவரவர் உரிமை. ஆனால், பத்திரிகையாளரை கேள்வி கேட்க கூடாது என்று சொல்வதும், கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை மிரட்டுவதும் அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்” என கூறியுள்ளனர்.

”நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணிக்கு, இவ்வாறு பத்திரிகையாளரை மிரட்டி கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவது, அவர் சத்தியபிரமாணம் செய்த அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பது தெரியாதா? காலில் காரை ஏற்றி காயம் ஏற்படுத்துவது கிரிமினல் குற்றம் என்பது தெரியாதா? ஆகவே, பத்திரிகையாளர்களை மிரட்டிய தன் கட்சிக்காரரை கண்டிக்காததோடு, பத்திரிகையாளருக்கு காயம் ஏற்படுத்திய அன்புமணியை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது” என மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்