Aran Sei

வாரணாசியில் விற்பனைக்கு வந்த பிரதமரின் அலுவலகம் : ஓஎல்எக்ஸ் வலைதளத்தில் விற்பனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாரனாசி அலுவலகம் விற்பனைக்கு இருப்பதாக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நான்கு நபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரின் மக்களவை தொகுதியான வாரனாசியில் அமைந்திருக்கும் மக்கள் தொடர்பு அலுவலகத்தை புகைப்படம் எடுத்து விற்பனைக்கு இருப்பதாக ஒஎல்எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். பிரதமரின் மக்கள் தொடர்பு அலுவலகம் பேலூபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜவஹர் நகர் பகுதியில் அமைந்துள்ளது என மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பதக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த பகுதியில் இருக்கும் பிரதமரின் அலுவலகம் விற்பனைக்காக என ஓஎல்எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது நேற்று தான் தெரிய வந்தது என காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். இதையடுத்து பேலூபூர் காவல் நிலையத்தில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் பதக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் பதக் கூறியுள்ளார்
என தி வயர் இணையதளம் பதிவிட்டுள்ளது.

பிரதமரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை படம்பிடித்து ஓஎல்எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபர் அந்த நான்கு நபர்களில் ஒருவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட நபர்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஆய்வாளர் பதக் தெரிவித்துள்ளார் என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு முறை குஜராத்தின் முதல்வராக இருந்துள்ள பிரதமர் மோடி, தொடர்ந்து இரண்டு (2014, 2019) முறை வாரணாசி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்