‘ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் அமைப்பு’ உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தலைவர்கள் மாநாட்டில், காணொளி வாயிலாக கலந்துகொண்ட பிரமர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் இடையில் பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர், மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி, எம்.எல்.ஏ) அனைவரையும் இணைக்கும் தளம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த தளத்தின் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, அவையில் (நாடாளுமன்றம், சட்டமன்றம்) எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.
இளைஞர்கள், பெண்கள் மற்றும் வளரும் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு அவையில் அதிக நேரம் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள பிரதமர், அவை நடவடிக்கைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க, தனியாக ஒரு நாள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாடாளுமன்றம் நடைபெறும் நாட்கள் குறைந்துள்ளதும், சட்டங்கள் இயற்றப்படும்போது, போதுமான விவாதங்கள் நடைபெறாததும் கவலையளிப்பதாக கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்று நூறு ஆண்டுகள் நிறைவடையும்போது, சட்டமியற்றும் அனைத்து அமைப்புகளுக்கும் (நாடாளுமன்றம், சட்டமன்றம்) பொதுவான விதி மற்றும் மரபுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பேசிய மாநிலங்களை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், தேவையற்ற பழமையான சட்டங்களை மாநிலங்கள் திரும்ப பெறுவதில் மந்தமாக செயல்படுவதாக கூறியுள்ளார். 2014 முதல் 2019 வரை, ஒன்றிய அரசு இதுபோன்ற 1,500 சட்டங்களை திரும்ப பெற்றுள்ளதாகவும் ஹரிவன்ஷ் கூறியுள்ளார்.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.