போராடி வரும் விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பததோடு, மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
நேற்று (ஜனவரி 11) காங்கிரஸ் தகவல் தொடர்பு தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
’விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்றால், மோடி பதவி விலக வேண்டும்’ – காங்கிரஸ்
அப்போது, “டெல்லியை நோக்கி சென்ற விவசாயிகளைத் தடுக்க, சாலைகளில் தடுப்புகள் அமைத்து தேசிய நெடுஞ்சாலைகளைச் சேதப்படுத்தியதற்காக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானா முதல்வர் மணிஹார் லால் கட்டர் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியதாக தி இந்து தெரிவித்துள்ளது.
விவசாயிகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் அக்கறையை மதிப்பதாக கூறிய அவர், “பிரச்சினையை சட்டரீதியான வழியில் தீர்க்க முடியாது. நாடாளுமன்றம் வழியாக தான் தீர்க்க முடியும்.” என்று ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
விவசாயிகளின் மரணம் : ‘கண்ணீரை துடைக்காமல் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுகிறது மோடி அரசு’
மேலும், “தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த 65 விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள 62 கோடி விவசாயிகளிடமும் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பிறகு போராடி வரும் விவசாயிகளிடம் போய் பேச வேண்டும். தற்போதைய போராட்ட நிலைமைக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும்தான் பொறுப்பு. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்கள் ஆகியோர் மீது தேச விரோத செயல்புரிந்ததாக, உச்ச நீதிமன்றம் வழக்குப் பதிய வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
“சட்டங்களையும் அரசியலமைப்பையும் உச்ச நீதிமன்றம் பாதுகாத்து வருகிறது. நாங்கள் அனைவரும் அதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். காந்திய முறையில் யாராவது சட்டங்களை எதிர்த்தால், நீதிமன்றம் அத்தகைய போராட்டத்தை ஆதரிக்கும். ஏனென்றால், அமைதியான வழியில் போராட்டம் செய்வது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமை ஆகும்.” என்று ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
பாஜக தலைவர் வீட்டில் சாணத்தைக் கொட்டி போராட்டம் – விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு
மேலும், “உச்சநீதிமன்றம் விவசாயிகளின் நலனுக்காக காட்டிய அக்கறையை நாங்கள் மதிக்கிறோம். சர்வாதிகார பிரதமரும் அவரது அரசும் தங்களின் முதலாளி நண்பர்களுக்கு உதவுவதற்காக இந்த மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று காங்கிரஸ் தகவல் தொடர்பு தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.