Aran Sei

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் – ‘பிரதமர் கலப்படம் இல்லாத பொய்யைச் சொல்கிறார்’

Image Credits: DNA India

வேளாண் சட்டங்களால், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் எனவும், இந்தச் சட்டங்களை கொண்டு வந்ததற்காக நன்றி சொல்லத் தேவையில்லை, நலமுடன் வாழ்ந்தால் போதும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்றும் அவர் விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகளிடம் இன்று, காணொளி உரையாடுதளம் வழியாகப் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பொருளாதாரம் மேம்படும். விவசாயிகளின் வருமானத்தை நாங்கள் இரட்டிப்பாக்க விரும்புகிறோம். விவசாயிகள் பிரச்னையில் இரட்டை வேடம் போடும் காங்கிரஸ், முதலை கண்ணீர் வடிக்கிறது. வேளாண் சட்டங்கள் வியாபாரிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வகையில் உள்ளது” என்று கூறினார்.

“இந்தச் சட்டங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது முடிவுக்கு வரும். விவசாய பொருட்களை சேகரிப்பதற்காக இந்தியா முழுவதும் குளிர்பதன கிடங்குகள் தொடங்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி விவசாய துறையிலும் விவசாயிகளுக்கு இடையேவும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது” என மோடி தெரிவித்தார்.

அத்துடன், “விவசாய விலை பொருட்களுக்கான ஆதார விலையை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “விவசாயிகளின் நலன்களுக்காகச் சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையின் பேரில்தான் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அரண்செய் – யிடம் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி “குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும் என்று அவர் வாயில் மட்டுமே வாக்குறுதி அளிக்கிறார். சட்ட தொற்றுதத்தில் அப்படி எதுவும் இல்லை. ஒரு பொய்யான செய்தியைப் பொது இடத்தில் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் அவர் அதை கூறட்டும். சட்டத்தில் அதை கொண்டு வரட்டும். தனியாருடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலை எப்படி வரும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“கொள்முதல் தனியாரிடம் சென்றுவிட்டால் அரசு கொள்முதல் செய்யாது. அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் பொதுவிநியோக அமைப்புகள் எப்படி இருக்கும்? பொது கொள்முதலை நிறுத்திவிட்டால், நியாய விலை கடைகளில் மக்களுக்கு எப்படி அத்யாவசிய பொருட்கள் கிடைக்கும்? இது வெறும் விவசாயிகள் பிரச்சனை மட்டும் அல்ல, ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மிகப் பெரும் பிரச்னை” என அவர் கூறினார்.

“ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை தருவேன் என்று கூறினார். ஆனால் இதையெல்லாம் அவ்வப்போது தெரிவித்துவிட்டு போய்விடுகிறார். இப்போதும், அவர் கொஞ்சம்கூட கலப்படம் இல்லாத பொய்யைச் சொல்லியிருக்கிறார்” என்று திருச்சி வேலுசாமி கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்