Aran Sei

’கொரோனா தடுப்பூசி போட அரசியல்வாதிகள் முந்தியடிக்க கூடாது’ – பிரதமர் அறிவுரை

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள்  முந்தக்கூடாது, தங்களுக்கான முறை வரும்போதுதான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

வரும் ஜனவரி 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. நேற்று (ஜனவரி 11), அதற்கான ஏற்பாடுகள் குறித்துப் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தடுப்பூசிக்கு அவசர அனுமதி – சு.வெங்கடேசன் சொல்லும் காரணம் என்ன?

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது,“இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே மத்திய அரசின் இலக்கு ஆகும். முதல் கட்டமாக சுமார் 3 கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும். சுகாதார ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் , பாதுகாப்புப் படைகள், காவல்துறை மற்றும் பிற துணை ராணுவப் படையினருக்கும் முதல் கட்டமாகத் தடுப்பூசி போடப்படும்.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், 3 கோடி கொரோனா போர் வீரர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்கும் என்றும் “கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள்  முந்தக்கூடாது என்றும் தங்களுக்கான முறை வரும்போது தான் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும்.” என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?

“தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே சந்தேகம் உருவாகியுள்ளது. ஆகவே, இந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்காக, ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப்போல், பிரதமர் நரேந்திர மோடியும் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.” என்று பீகார் மாநில காங்கிரஸ்  கமிட்டியின் தலைவர் அஜித் சர்மா கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்