Aran Sei

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் – ஏன் மோடிஜிக்கு பேசமாட்டாரா என ராகுல் காந்தி கேள்வி

ப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க, வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை மீட்க, அந்நாட்டின் தலைநகர் காபூலில் இருந்து தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் உதவி செய்வதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களில் பணிபுரியும் அனைத்து இந்தியப் பணியாளர்களையும் அண்மையில் இந்தியா திரும்பப் பெற்றது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில், இந்தியா சுமார் 3 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.

ஷடூட் அணை, சல்மா அணை, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடம் போன்ற பல முக்கிய திட்டங்களும் பல சாலைகளும் இந்திய உதவியுடன் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று (ஆகஸ்ட் 23), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள எஸ்.ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்கள் தொடர்பாக, அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு சுருக்கமான விளக்கமளிக்க, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான மேலதிக்க விவரங்களை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவிப்பார்.” என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ஏன் மோடிஜி பேச மாட்டாரா? அல்லது ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பது குறித்து போதுமான அறிவு அவருக்கு இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

யார் இந்த தாலிபான்கள்? – வரலாற்றில் ஒரு பயணம்

அகதிகளாகும் ஆப்கான் மக்களை ஏற்கும் உலகநாடுகள் – பெருந்துயரமும் மாண்புறும் மனிதநேயமும்

உள்கட்டமைப்பு திட்டங்களை முடித்துக்கொடுக்க வாருங்கள் – இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த தாலிபான்கள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்