Aran Sei

பிஎம் கேர்ஸ் நிதிக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை – டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

பிரதம மந்திரியின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (பிஎம் கேர்ஸ்) , சட்டத்திற்கு உட்பட்ட ஒரு அறக்கட்டளை என்றும், இந்த அறக்கட்டளையின் நிதி, இந்திய அரசின் நிதி இல்லை என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பிஎம் கேர்ஸ் நிதியை அரசியலமைப்பின் 12வது பிரிவின் கீழ் அரசு நிதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்கும்போது அரசு இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிஎம் கேர்ஸ் கீழ் பெறப்பட்ட நிதி, இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லாது என அரசு கூறியுள்ளது.

”இந்திய அரசிலமைப்பின் 12 பிரிவின் கீழ் அரசு அல்லது அதிகாரத்திற்கு உட்பட்டவைகள் தொடர்பான தரவுகளை மட்டுமே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற முடியும். மூன்றாம் தரப்பு தொடர்பான தகவல்களை வெளியிடுவதை அனுமதிக்க முடியாது” என பிரதமர் அலுவலக துணை செயலாளர் பரதீப் குமார் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையின் கௌரவ அடிப்படையில் பணிபுரிவதாக தெரிவித்துள்ள ஸ்ரீவத்சவா, பிரதமரால் உருவாக்கபட்ட இந்த அறக்கட்டளைக்கு ஒன்றிய அரசின் நிதி, பாதுகாப்பு மற்றும் உள்துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் அறங்காவலர்களாக உள்ளனர் என கூறியுள்ளார்.

அறக்கட்டளை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது மற்றும் அறக்கட்டளையின் நிதிகள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் உருவாக்கிய குழுவில் பட்டைய கணக்கராக உள்ளவரால் தணிக்கை செய்யப்படுகிறது என ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்குப் பெறப்பட்ட நிதிகள் அனைத்தும் காசோலை, வரைவோலை மற்றும் இணைய பரிவர்த்தனைகள் மூலமாக பெற்றப்பட்டது என்றும், அறக்கட்டளையின் வரவு செலவுகள் அனைத்தும், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அறக்கட்டளையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த அறக்கட்டளையின் பத்திரத்தில், அது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ள எந்தச் சட்டத்தாலும் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : Indian Express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்