நரேந்திர மோடியின் பிஎம் கேர்ஸ் நிதி ( PM Cares Fund) இணையதளத்தில் சமீபத்தில் வெளியான பொறுப்பாவணம் (trust deed), பிஎம் கேர்ஸ் நிதி அரசு நிறுவனமா? அல்லது தனியார் நிறுவனமா? எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தியாவில், மார்ச் மாதம் கொரோனா நோய்தொற்று பரவத் தொடங்கிய போது, பிரதமர் நரேந்திர மோடி பி.எம் கேர்ஸ் நிதியை அறிமுகப்படுத்தினார். கொரோனா நோய்தொற்றை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உதவி செய்ய, மக்கள் இத்திட்டத்தின் வழியே பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டது.
“கார்ப்பரேட் நன்கொடைகளை பெறுவதற்காக பி.எம் கேர்ஸ் நிதி அரசின் அறக்கட்டளை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பி.எம் கேர்ஸ் நிதியின் பொறுப்பாவணத்தில் , (தகவலறியும் உரிமைச் சட்டங்கள் வழியே கேட்கப்படும் கேள்விகளில் இருந்து தப்பிக்க) அது தனியார் நிறுவனம் என குறிப்பிடப்பட்டுள்ளது” என நியூஸ் ஹெரால்டு தளம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கிறது.
“பி.எம் கேர்ஸ் நிதி, டெல்லியில் இருக்கும் வருவாய் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அதன் தலைவர் எனவும், மூத்த அமைச்சர்கள் அதன் அறங்காவலர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில், பி.எம்.கேர்ஸ் நிதியின் இணையதளத்தில் வெளியான பொறுப்பாவணம், அது அரசினுடைய அறக்கட்டளை இல்லை என்கிறது” என என்டிடிவி தெரிவித்துள்ளது.
பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் பொறுப்பாவணத்தின் 5.3 வது பிரிவு, “இந்த அறக்கட்டளை எந்த அரசினாலும், அல்லது அரசின் முகமைகளினாலும் கட்டுப்படுத்தப்படாது. மத்திய அரசோ, மாநில அரசோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அறக்கட்டளையின் இயக்கத்தை கட்டுப்படுத்தாது” என்கிறது.
மார்ச் 28 அன்று, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில், (கார்ப்பரேட் நன்கொடைகளை பெற) பிஎம் கேர்ஸ் நிதி, கார்ப்பரேட் சமூக பொறுப்புத் திட்டம் (சி.எஸ்.ஆர்) என அறிவித்தது.
செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், பி.எம் கேர்ஸ் நிதி, மத்திய அரசால் அமைக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருப்பதாக என்டிடிவி கூறுகிறது.
மே 26 ஆம் தேதி, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் பி.எம்.கேர்ஸ் நிதி, மார்ச் 28ல் அன்றே கம்பெனி சட்டத்தில் சேர்க்கப்பட்டதாக மாற்றியது. அதனால், பி.எம்.கேர்ஸ் நிதி, இரண்டு மாதங்கள் தனியார் நிறுவனமாக செயல்பட்டு, கார்ப்பரேட் நன்கொடைகளை பெற்றுள்ளது என நியூஸ் ஹெரால்டு தெரிவிக்கிறது.
இச்செய்தியை குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பி.எம் கேர்ஸ் நிதி வெளிப்படைத்தன்மையற்றது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
PM Cares- 'Chaliye, transparency ko vanakkam'! pic.twitter.com/EgGR7LiYH9
— Rahul Gandhi (@RahulGandhi) December 17, 2020
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரந்தீப் சிங் சுர்ஜெவாலா, பிஎம் கேர்ஸ் நிதி குறித்து சில கேள்விகளை நரேந்திர மோடியிடம் எழுப்பியிருக்கிறார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. “1)எதற்காக இந்திய தூதரகங்கள் பி.எம் கேர்ஸ் நிதியை விளம்பரப்படுத்தி, நன்கொடைகளை பெற்றது ? 2) எதற்காக தடை செய்யப்பட்ட சீன செயலிகளில் பிஎம் கேர்ஸ் நிதி விளம்பரம் செய்யப்பட்டது ? 3)பாகிஸ்தானில் இருந்து எவ்வளவு பணம் வந்தது? யார் அதை கொடுத்தார்கள்? 4) கத்தாரில் இருந்து நன்கொடையளித்த இரண்டு நிறுவனங்கள் யார் யார், எத்தனை கோடி ரூபாய்கள் நன்கொடை அளித்தனர்?” ஆகியயை உட்பட, பிஎம் கேர்ஸ் நிதி குறித்து பல கேள்விகளை காங்கிரஸ் தலைவர் முன் வைத்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.