திருநெல்வேலியை சேர்ந்த ஒரு பெண், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் ‘சிறைபிடிக்கப்பட்ட’ தனது கணவர் மற்றும் பிற இந்திய தொழிலாளர்களை மீட்பதற்காக அவசர வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தின் பதிலைக் கோரியுள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாகச் சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த எம்.வெல்மதி (33), ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் ‘சிறைபிடிக்கப்பட்ட’ தனது கணவர் மற்றும் பிற இந்திய தொழிலாளர்களை மீட்பதற்காக அவசர வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தின் பதிலைக் கோரியுள்ளது.
“பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை” என்று வெல்மதி கூறியுள்ளதாக ‘தி இந்து’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. “அவர்கள் தங்கள் குடும்பங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று அவதி படுகிறார்கள். எல்லைகளுக்கு வெளியே உள்ள இந்தியர்களைக் காப்பாற்றுவதும் அரசாங்கத்தின் கடமை தான்” என்று வெல்மதி தெரிவித்துள்ளார்.
நீதிபதி ரோஹிண்டன் எஃப். நாரிமன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் எஸ்.நாகமுத்து மற்றும் வழக்கறிஞர்கள் பாரி வேந்தன், பிரபு ராமசுப்பிரமணியம் ஆகியோர் வெல்மதி தரப்பில் ஆஜராகியுள்ளார். இவர்கள் வாதத்தைக் கேட்ட நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசுக்குப் பதிலளிக்க 3 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
“வெல்மதியின் கணவர் உட்பட 40 இந்தியர்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
“வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு வாழ்வதற்கான உரிமை உள்ளது” என மனுதாரர் வெல்மதி கூறியுள்ளார்.
“அங்கே போதிய வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாததால் இந்தியர்களுக்கு ‘மரணம் நெருங்கியுள்ளது'” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“பேரழிவு மேலாண்மை சட்டத்தின் பிரிவு 35-ன் கீழ், வெளிநாடுகளில் உள்ள தங்களது குடிமக்களின் நல்வாழ்வுக்காக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் கூட ஒருங்கினையும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது” என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.