Aran Sei

புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான மனு – மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது

டிஜிட்டல் செய்தி இணையதளமான தி வயர்ன் அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு,  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் எம்.கே.வேணு, தி  நியூஸ் மினிட் இணையதளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் ஆகியோர் கூடுதல் மனுதாரர்களாக இருக்கும் அம்மனுவில், ”டிஜிட்டல் செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்த, பிப்ரவரி 25, 2021 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் ’சட்டவிரோதமானது’ என குறிப்பிடப்பட்டிருப்பதாக, தி இந்து கூறியுள்ளது.

ஜக்கியின் காவிரி அழைக்கிறது திட்டம் அரசின் திட்டமா ? – கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி

வழக்கறிஞர்கள் பிரசன்ன எஸ், வினூத்னா விஞ்சம் மற்றும் பாரத் குப்தா மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விதிகள் டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கு ஆழமான மற்றும் கடுமையான தீங்குகளை ஏற்படுத்துவதோடு, அவற்றின் உரிமைகளை மறுக்கிறது என குறிப்பிடப்பட்டிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”2021 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள், செய்தி வெளியீட்டாளர்களுக்கு இரண்டு தனித்துவமான ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று தொடர்ந்து பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், இரண்டாவது மூன்று அடுக்கு குறைதீர்க்கும் வழிமுறைகளுடன் கூடிய மரபு நெறிமுறைகள்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, தி இந்து கூறியுள்ளது.

”தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் போன்ற உள்ளடக்கத்தை வெளியிடும் நிறுவனங்கள், பாதுகாக்கப்பட்ட உள்ளடக்கத்தை வெளியிடும் நிறுவனங்கள் என இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டிற்கும் தனித்தனியாக நன்னடத்தை விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

’பெண்களுக்கானது சமையல் அறை’ ட்விட்டரில் பதிவிட்ட பர்கர் கிங் – எதிர்ப்பு வலுத்ததால் மன்னிப்பு கோரி பதிவு நீக்கம்

“தகவல் தொழில்நுட்ப (IT) சட்டம் டிஜிட்டல் செய்தி ஊடகத்தை ஒரு தனி வகை நிறுவனங்கள் என அங்கீகரிக்கவில்லை. மேலும், நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத்தை எந்தச் சிறப்பு ஒழுங்குமுறைகளுக்கும் உட்படுத்த விரும்பவில்லை,” என அந்த மனுவில் கூறியிருப்பதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

“தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்பட வேண்டிய உள்ளடக்கமாக வெளிப்படையான பாலியல் செய்திகள், குழந்தை ஆபாசம், சைபர் பயங்கரவாதம் போன்றவை கீழமை நீதிமன்றங்களால் வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்,” என தி வயர்  அறக்கட்டளை தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களுக்கு இணையாக ஒரு நீதித் துறை அமைப்பைத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் உள்ள விதிகளால் உருவாக்கக் கூடாது. மேலும்,  இது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பொருள் மற்றும் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் மனுவில் கூறியிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்