Aran Sei

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான ஐஐடி-களில், முனைவர் பட்ட படிப்பிற்கு, பொது பிரிவில் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாதியே, பட்டியல் இன மற்றும் பழங்குடியின வகுப்பில் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை இருப்பதாக, தி இந்து செய்தி  வெளியிட்டுள்ளது.

தி இந்து நாளேடு உள்ளிட்ட பலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள ஐந்து பழைய ஐஐடிக்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல், பழங்குடியின மாணவர்களிடமிருந்து  பெறப்பட்ட முனைவர் பட்டப்படிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் வழங்கப்பட்ட சேர்க்கைகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டதில்  இந்த உண்மை புலப்பட்டிருப்பதாக தி இந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு: ‘பறிபோகும் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான இடங்கள்’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

ஒவ்வொரு 100 விண்ணப்பங்களில், தேர்வான மாணவர்கள் எண்ணிக்கையைக் குறிக்கும் சேர்க்கை விகிதம், வரலாற்று ரீதியாக முன்னுரிமை பெற்ற வகுப்பைச் சேர்ந்த (பொது பிரிவு)  மாணவர்களுக்கு 4 விழுக்காடாகவும், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பிற்கு முறையே 2.7%,  2.16% மற்றும் 2.2% ஆக உள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில், மத்திய கல்வி அமைச்சகம் சமர்பித்த தகவலுக்கு எதிராக இருப்பதாகவும், முனைவர் படிப்பிற்கான இடங்களை, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்குவதில், ஐஐடிக்கள் தவறுவதை காட்டுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி, பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கு 15 விழுக்காடு இடங்களும், பழங்குடியின மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடங்களும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் நிலையில், 2015  முதல் 2019 ஆம் ஆண்டுவரை, அனைத்து ஐஐடிகளிலும் நடைபெற்ற மொத்த சேர்க்கைகளில், பட்டியலின வகுப்பினருக்கு 9.1 விழுக்காடு இடங்களும், பழங்குடியின வகுப்பினருக்கு 2.1 விழுக்காடு இடங்களும் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக தி இந்து தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீடு மறுப்பு: ’அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது ஏன்?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

அதேபோல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய 27 விழுக்காடு இடங்களில், 23.2 விழுக்காடு இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதமிருக்கும் 65.6 விழுக்காடு அல்லது சுமார் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள், பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக, அந்த செய்த்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளிம்புநிலை சமூகங்களிடமிருந்து போதிய விண்ணப்பங்கள் வருவதில்லை என ஐஐடி தொடர்ந்து கூறி வந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல், அதற்கு முற்றிலும் நேரேதிராக இருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றப்பட்ட தகவல்கள், 2015 முதல் 2019 ஆம் ஆண்டுவரை, சென்னை, மும்பை, டெல்லி, கான்பூர் மற்றும் கரக்பூர் ஐஐடிக்களின் சிவில், எலெக்ட்ரிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளுக்கு பெறப்பட்ட, 95,445 விண்ணப்பங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட, 3,279 முனைவர் பட்டப் படிப்புச் சேர்க்கைகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியது என தி இந்து தெரிவித்துள்ளது.

ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

மொத்தமிருக்கும் 23 ஐஐடிக்களில் நடைபெற்ற சேர்க்கையில், 60 விழுக்காடு சேர்க்கைகள், இந்த ஐந்து ஐஐடிகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த ஐந்து ஐஐடிகள் வழங்கும் 80 முனைவர் பாடப்பிரிவுகளில், 25 விழுக்காடு சேர்க்கை 4 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளாதாகவும் தி இந்து தெரிவித்துள்ளது.

பொது பிரிவு மாணவர்கள் சேர்க்கை விகிதம் டெல்லி, சென்னை, மும்பை மற்றும் கான்பூர் ஐஐடிகளில் மிகவும் அதிகமாக இருக்கும் வேளையில், கரக்பூரில் சிறிய அளிவிலேயே அதிகமாக இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எண்களில் குறிப்பிட்டால், விண்ணப்பித்த 11,019 பட்டியலின வகுப்பு மாணவர்களில், வெறும் 238 மாணவர்களும் மற்றும் விண்ணப்பித்த 1,809 பழங்குடியின மாணவர்களில், 40 மாணவர்கள் மட்டும் சேர்த்து கொள்ளப்பட்டனர் என தி இந்து கூறியுள்ளது.

’இஸ்லாமியர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு; சரிவர நடைமுறைப்படுத்தவில்லை ’ – எம்.ஹெச்.ஜவாஹிருல்லா

மொத்த விண்ணப்பங்களில் உள்ள பொதுப்பிரிவு மாணவர்களின் விழுக்காட்டை விட, மொத்த சேர்க்கையில் உள்ள பொதுப்பிரிவு மாணவர்களின் விழுக்காடு, எப்போதும் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு நேர்மாறாக, இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பித்த விழுக்காட்டை விடமாணவர்களின் சேர்க்கை விழுக்காடு குறைவாக இருப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக டெல்லி ஐஐடியில், மொத்த விண்ணப்பங்களில் பொதுபிரிவில் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 63.3 விழுக்காடாக இருக்கும் நிலையில், மொத்த சேர்க்கையில் பொதுப்பிரிவினரின் விழுக்காடு 73.6 ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலன மற்றும் பழங்குடியின மாணவர்களில், விண்ணப்பித்த விழுக்காடு முறையே 22.9%, 11.9% மற்றும் 1.9% ஆக இருக்கும் நிலையில், அவர்களின் சேர்க்கை விகிதம் முறையே 17%, 6% மற்றும் 0.7%  ஆக குறைந்து இருக்கிறது என தி இந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஐடி டெல்லியில் 2019 ஆம் ஆண்டு மின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE) பிரிவிற்காக விண்ணப்பித்த 1,071 பொதுப்பிரிவினரில், 50 மாணவர்களுக்கு (4.7%)  சேர்க்கை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், விண்ணப்பித்த 195 பட்டியலின மாணவர்களில் 3 மாணவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 30 பழங்குடியின மாணவர்களில் ஒருவருக்கு கூட சேர்க்கை வழங்கப்படவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7.5 சதவீத இட ஒதுக்கீடு : தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

அதேபோல்,  2016 ஆம் ஆண்டு, கான்பூர் ஐஐடியில்,  மின் மற்றும் மின்னணு பொறியில் பாடப்பிரிவிற்கான சேர்க்கையின்போது, விண்ணப்பித்த 396 பொது பிரிவு மாணவர்களில், 29 மாணவர்களுக்குச் சேர்க்கை வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் 46 பட்டியலின மாணவர்களில் ஒருவருக்கு கூட சேர்க்கை வழங்கப்படவில்லை என அந்த செய்த்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து ஐஐடிக்களின் தகவல்கள் இப்படி இருக்க, கௌஹாத்தியின் தகவல்களோ இதிலிருந்து வேறுபட்டிருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கௌஹாத்தி ஐஐடியில் பெறப்பட்ட 13,033 விண்ணங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 456 சேர்க்கைகளில், விளிம்புநிலை சமூகங்களின் சேர்க்கை விகிதம், பொது பிரிவுச் சேர்க்கை விகிதத்தைவிட உயர்வாக அல்லது சற்று நெருக்கத்தில் இருப்பதாக தி இந்து தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் : நீண்ட போராட்டத்திற்கு பின் குஜ்ஜார் மக்களுக்கு இட ஒதுக்கீடு

பொதுப்பிரிவு மாணவர்களின் சேர்க்கை விகிதம் 3.3 விழுக்காடாக இருக்கும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் முறையே 4%, 3.4%, 3.9%  ஆக  இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற ஐஐடிகளைப்போல, கௌஹாத்தியில் இட ஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்கப்படாவிட்டாலும், இதர பிற்படுத்தப்ட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம், அதற்கு அருகாமையில் இருப்பதாக தி இந்து கூறுகிறது.

இது தொடர்பாக ஆறு ஐஐடிக்களை தொடர்புகொண்டபோது, டெல்லி மற்றும் கரக்பூர் ஐஐடிகள் பதிலளிக்கவில்லை என்றும் மற்ற ஐஐடிகள் இட ஒதுக்கீட்டின்படி இடங்களை நிரப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தன என தி இந்து கூறியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்