Aran Sei

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு – பல மாநிலங்களில் விலை ரூ.100 தாண்டியது

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த வாரம் மட்டும் ஐந்தாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிரா மற்றும் மத்தியபிரதேச ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டிருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் விலை அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 பைசாவும், டீசல் 33 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே 4 லிருந்து தற்போது 5வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹91.53 ரூபாய்க்கும், டீசல் ₹82.06 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிலநாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில், பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. இந்நிலையில் மே 9 அன்று மகாராஷ்டிரா மாநிலத்திலும், பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது, மகாராஷ்டிராவின் பர்பானி பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.20 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் மாவட்டத்தில், பெட்ரோல் லிட்டர் 102.42 ரூபாய்க்கும் , மத்தியபிரதேச மாநிலத்தின் அனுப்புர் பகுதியில் 102.12 ரூபாய்க்கும் விற்பனையாவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் விலையில் 60 சதவீதமும், டீசல் விலையில் 54 சதவீதத்திற்கும் மேலாக வரிவிதித்து வருகின்றன. மேலும், ஒன்றிய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாய் கலால் வரியாகவும், டீசலுக்கு 31.80 ரூபாயும் வசூலித்து வருகின்றது.

பெட்ரோல், டீசல் விலை மாநிலங்கள் விதிக்கக்கூடிய வாட் மற்றும் இதர வரிகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடக்கூடியது அதிக பட்சமாக ராஜஸ்தானிலும் அதற்கடுத்து மத்தியப்பிரதேசத்திலும் அதிக வாட் வரி விதிக்கப்படுவதாக தி இந்து கூறுகிறது.

கடந்த மாதம், ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றதை அடுத்து, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்பட்டுவந்த நிலையில், கடந்த ஏப்ரல் 15 அன்று விலையேற்றம் கண்டது. இதற்கு பின்னர் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்