Aran Sei

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை ரத்து செய்க – ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான கூடுதல் வரியை இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும், இந்நிலையில் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் இந்த அளவு விலை உயர்வு இருக்காது என்று சொல்லப்படுவது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,  “ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானது என்பதால் அதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடாகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு ரத்து செய்யும் வரை, பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பதற்கு, அதன்மீது உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு விதித்திருக்கும் கூடுதல் வரியை (செஸ்) ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் எனவும் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது, “ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 32.98 ரூபாயும் டீசல் மீது 31.83 ரூபாயும் ஒன்றிய பாஜக அரசு வரியாக வசூலிக்கிறது. எக்ஸைஸ் வரி மட்டுமல்லாமல் சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி ; வேளாண்மை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி ;சிறப்பு கூடுதல் எக்சைஸ் வரி என பெட்ரோல் டீசல் மீது பல்வேறு வரிகளை விதித்து இந்திய ஒன்றிய அரசு மக்களைச் சுரண்டுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜிஎஸ்டி முறையைமாநில அரசு  ஏற்கவில்லை என்றாலும் அது நடைமுறையில் இருக்கும் வரை கூடுதல் வரி விதிப்பு என்னும் பெயரில் இந்திய ஒன்றிய அரசு செய்யும் சுரண்டலை முற்றாகக் கைவிட வேண்டும் என்றும், அதைக் கைவிடாமல் பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுபோக மாநில அரசுகள் உடன்படவில்லை என்று குற்றம் சாட்டுவது கூட்டாட்சியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு சமமாகும் என்றும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்காமல் தானே மொத்த வரியையும் எடுத்துக் கொள்கிற கூடுதல் வரி விதிப்பு முறையைப் பெட்ரோல் டீசல் மீது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அனைத்திலும் கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்