பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கிற்கும், எம்டிஎம்ஏ என்று அழைக்கப்படும் பல்நோக்கு விசாரணைக் குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது. அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், ஆளுநர் இதுவரை அதன் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பல்நோக்கு விசாரணைக் குழுவின் விசாரணை முடியும்வரை ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி, பேரறிவாளன் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் என்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது.
“நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் இந்தப் பரிந்துரை இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது,” என்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜஸ் ராஸ்டோகி அடங்கிய அமர்வு கூறியது.
ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைக்கலாமே என்று, தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் பாலாஜி, ஆளுநர் எம்டிஎம்ஏவின் அறிக்கையை கேட்டிருப்பதாக கூறினார்.
அப்போது, ராஜீவ்காந்தி படுகொலையில் உள்ள மிகப்பெரிய சதித்திட்டம் குறித்து எம்எடிஎம்ஏ 20 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுகுறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ (எம்டிஎம்ஏ) தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் “இந்த வழக்கில் நிவாரணம் கோரப்பட்டுள்ள விவகாரம், ஆளுநருக்கும் மனுதாரருக்கும் இடையிலான பிரச்சனை” என்று கூறப்பட்டுள்ளது.
விடுதலை செய்யலாமா வேண்டாமா என்பதை ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று கூறியள்ள சிபிஐ, இந்த வழக்கிற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
கடந்த முறை விசாரணையின்போது எம்டிஎம்ஏவிடம் தமிழக ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் “விசாரணையின் நிலை குறித்து தெரிவிக்கும்படி, தமிழக ஆளுநர் அலுவலகத்திலிருந்து சிபிஐக்கு எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “17.06.1996 அன்று, சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், விசாரணை குறித்த தகவலை தெரியப்படுத்த முடியாது” என்றும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஐ தாக்கல் செய்துள்ள இந்த பதில்மனுவை தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்த எம்டிஎம்ஏ விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.