Aran Sei

பொய் சொல்லும் பாஜகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – பிரியங்கா காந்தி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசில் கொல்கத்தாவில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசின் வளர்ச்சி என்று  விளம்பரத்தில் பயன்படுத்தியதற்கு முதலமைச்சர் ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் விமர்சித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்தின் ஐந்து ஆண்டு ஆட்சியின் சாதனைகள் தொடர்பாக வெளியான முழுபக்க விளம்பரத்தில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் கட்டப்பட்ட வெள்ளை நீல வர்ணம் பூசப்பட்ட ‘மா’ மேம்பாலத்தின் புகைப்படமும், அதில் மஞ்சள் நீறத்தில் டாக்சி பயணிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.

நாளிதழில் வெளியான இந்த விளம்பரத்தைப் பகிரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், உத்திரபிரதேச அரசு மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி அவரது ட்விட்டர் பக்கத்தில், “யோகி ஆதித்யநாத்திற்கு உத்திரபிரதேசத்தை மாற்றுவது என்பது, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி உருவாக்கி உள்கட்டமைப்புகளின் புகைப்படங்களை திருடி அவருடையதாக பயன்படுத்திக் கொள்வது” என பதிவிட்டுள்ளார்.

இந்த விளம்பரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலில் வேலைவாய்ப்புக் குறித்து பொய்யான விளம்பரத்தை அளித்து உ.பி. பாஜக அரசு சிக்கியது, இப்போது, அவர்களின் விளம்பரத்தில் பொய்யான மேம்பாலம், தொழிற்சாலை புகைப்படங்களை வெளியிட்டது அம்பலமாகியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

“பாஜகவின் பொய்யான கூற்றுக்களின் உண்மைகளை உத்தரப்பிரதேச மக்கள் பார்த்து வருகிறார்கள். முதல்வரையும், பாஜக அரசையும் தேர்தலில் மக்கள் மாற்றுவார்கள். உ.பி. அரசு மக்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் மீது அக்கறையும் இல்லை. பொய்யான விளம்பரங்களை வெளியி்ட்டு உரிமை கொண்டாடுகிறது யோகி அரசு ” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்