Aran Sei

“நாங்கள் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளோம்” – இஸ்லாமியர்களை பழிவாங்கும் உத்தரபிரதேச அரசு

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் இதுவரை இல்லாத அளவு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு இயக்கங்களைத் தூண்டிவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தை மீறி, முஸ்லீம்கள் மீது பாகுபாடு காட்டும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) உருவாக்குவது உள்ளிட்ட பிற அரசு கொள்கைகளையும் குறித்த சர்ச்சைக்குரிய உறுதிமொழியை அது கொடுத்தது.

சிறிதும் நேர்மையின்றி நடக்கும் டெல்லி இனக் கலவர விசாரணைகளுக்கு இடையே, கொரோனா நெருக்கடியால் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்திற்கு தடை ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்த கலவரம் நடந்து ஓராண்டு கழித்து, ஸ்க்ரோல் இணையதளம், மீண்டும் அங்கு சென்று, இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க அந்த நிகழ்வில் பங்கு பெற்ற சிலருடன் பேசியது.

2019 டிசம்பர் 19 ஆம் தேதி, லக்னோவில் காத்ராவின், மானூர் சௌத்ரி (38) தனது கடையை மூடி விட்டு வீட்டிற்குச் செல்ல இருந்தார். இந்திய குடியுரிமைக்காக முதன் முறையாக மத அடிப்படையிலான தேர்வை கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, ஒரு வாரத்திற்கு முன்பே போராட்டங்கள் துவங்கி விட்டன. நிலைமையை மேலும் மோசமாக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா, தான் முன்மொழிந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன், மீண்டும் மீண்டும் இச்சட்டத்தை இணைத்தார். விமர்சகர்கள் இதனை இந்திய முஸ்லீம்களைக் கொடுமைப்படுத்த பயன்படும் நடைமுறையாக இருக்கும் என அஞ்சினர். நாடு முழுவதும் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

உத்தர பிரதேசத்தில், பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன. இவை  பெரிதாகவே, காவல்துறை மிருகத்தனமான சக்தியை பயன்படுத்தியதில் குறைந்தது 19 உயிர்கள் கொல்லப்பட்டன. அன்று தலைநகர் லக்னோவில் பல சாலைகளும் போராட்டகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. எனவே சௌத்ரி, தான் விரைவாக வீட்டிற்குச் செல்வதற்கான வழியை அருகிலிருந்த அதிகாரிகளிடம் கேட்டார். “அவர்கள் என்னை (முக்கிய) சாலை வழியாகச் செல்லுமாறு கூறினர்” என்று சௌத்ரி, காத்ராவில் உள்ள தன் வீட்டிற்கு கைப்பேசி மூலம்  கூறினார். தான் அவர்களது அறிவுரையை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார் சௌத்ரி.  சில நாட்கள் கழித்து டிசம்பர் 24 ம் தேதி அசன்கஞ்ச காவல்நிலைய அதிகாரிகள் சௌத்ரியை டிசம்பர் 19ம் தேதி நடந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்தனர். ஏறத்தாழ  ஒரு மாதத்திற்குப் பிறகு லக்னோ கீழமை நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கி உள்ளது. அவருடைய பிரச்சினை அத்துடன் முடிவடையவில்லை.

எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு  உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத், அவரது அரசு போராட்டங்களின் போது சொத்துக்களை நாசம் செய்தவர்களைப் “பழி வாங்கும்” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்த ஒரு வாரத்திற்குள், உத்தரபிரதேச அரசு, சேதப்படுத்தப்பட்ட அரசு சொத்துக்களுக்கும், சில வழக்குகளில் தனியார் சொத்துக்களுக்கும் இழப்பீடு கோரி தாக்கீதுகளை அனுப்பத் துவங்கியது. இதில் சௌத்ரிக்கும் ஒரு தாக்கீது வந்துள்ளது. அதில், அவரிடமிருந்தும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடமிருந்தும் 21.7 லட்ச ரூபாய் இழப்பீடு வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அவர் இழப்பீடைச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதாகவும், தனக்கு எந்த வகையிலும் அந்த வன்முறையுடன் தொடர்பில்லை என்றும் கூறுகிறார். மாவட்ட நிர்வாகம் அவரது கடையை மூடி முத்திரை (sealed) வைத்து, இந்த கொரோனா நெருக்கடியில் நாடு முழுவதும் முழு முடக்கம் அறிவித்திருக்கும் வேளையில் அவர் கையில் பைசா கூட இல்லாத நிலையை உருவாக்கிவிட்டது. “நாங்கள் பிச்சைக்காரர்கள் போல் ஆகிவிட்டோம்.” என்கிறார் அவர்.

சேதங்கள் மீட்பு

மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் யாவும், சேதங்களுக்கான இழப்பீட்டை மீட்டெடுக்கத் தொடர்ந்து அதிக அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் படி, முசாபர்பூர், லக்னோ, ராம்பூர், பிஜ்னோர், சம்பல், மீரட், கான்பூர், புலந்தேஷர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, குற்றம் சாட்டப்பட்டுள்ள சுமார் 400 பேருக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. ராம்பூரில் 122 பேருக்கு இது போன்ற தாக்கீதுகளை அனுப்பி உள்ளதாக மாவட்ட நீதிபதி ஆஞ்சனேய குமார் சிங் கூறுகிறார். டிசம்பர் 2019 ல், மொத்த சேத மதிப்பு 14.8 லட்ச ரூபாயாக இருந்தது, மறு ஆய்வு செய்ததில் 9.6 லட்சமாக குறைந்துள்ளதாக சிங் கூறுகிறார். இழப்பீடு இன்னும் மீட்டெடுக்கப் படவில்லை என்று கூறும் அவர், “எடுத்துக்காட்டாக, யாரோ ஒருவர் பேருந்தை எரித்து விட்டதாகக் கூறினால் நாங்கள் அதை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். இங்கு வன்முறை ஒரு மணி நேரம் நடந்தது. ஒரு காவல்துறை வாகனமும், இரண்டு பேருந்துகளும் எரிக்கப்பட்டுள்ளன.” என்கிறார் அவர்.

கான்பூரில் 43  லட்சம் மதிப்பிலான சேதங்களை மீட்க, 48 பேருக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளதாக வி.கே‌ மிஸ்ரா தெரிவித்தார். இதில் பெக்கான்கஞ்ச் காவல்நிலையப் பகுதியில் ஏற்பட்ட, 2.8 லட்சம் சேத மதிப்பீடு முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. 1.5 லட்சம் சேத இழப்பீட்டை பாபுபூர்வா காவல்நிலைய பகுதியிலிருந்து யாரும் தரவில்லை. நாங்கள் கான்பூரில் எந்த வழக்கிலும் இழப்பீட்டிற்காக சொத்துக்கள் முடக்கத்தை மேற்கொள்ளவில்லை என்றார் அவர். எனினும் லக்னோ மாவட்ட நீதிபதி தொலை பேசியில் இழப்பீடு தாக்கீது குறித்து தகவல்களைத் தர மறுத்துவிட்டார். ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி அறிக்கை, 2.5 கோடி ரூபாய்க்கான இழப்பீட்டிற்காக 152 பேருக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

ஒரு அரைகுறை ஆணை

இந்த தாக்கீதுகளை அனுப்பும் நடைமுறை சட்ட ஆய்வின் கீழ் வந்துள்ளது. முதலாவதாக, இந்த நடைமுறை 2010ம் ஆண்டில், அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த  அரைகுறையான மற்றும் குறைபாடுள்ள உத்தரவின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. இது  சேதத்தை மதிப்பிடவும், பொதுமக்களிடமிருந்து உரிமைக் கோரல்களைப் பெறவும் அரசால் பரிந்துரைக்கப்பட்ட”தகுதிவாய்ந்த அதிகாரிக்கு” அதிகாரம் வழங்குகிறது என்கின்றனர் வல்லுநர்கள். இந்த உத்தரவு அரசாங்கத்திற்கு சேதங்களை மீட்டெடுக்கும் பொறுப்பைத் தருகிறது. எனினும் அது 2009 ம் ஆண்டின் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அது சேதங்களை மதிப்பிடுவதற்கும், பொறுப்பை (liablity) ஆய்வு செய்வதற்கும் உரிமைக்கோரல் ஆணையரை நியமிக்க  வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது.  பிப்ரவரியில் கான்பூரில் வசிக்கும் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட இது போன்ற ஒரு மீட்டெடுப்புத் தாக்கீதை  அலகாபாத் உயர்நீதிமன்றம், உரிமைக் கோரல் ஆணையரிடமிருந்து வர வேண்டும் எனக் கூறி,  தடை விதித்தது. ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் இவை அத்தனையையும் ஒட்டு மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற ஆலோசனைக்குப் பின்னர், சேதங்களை மீட்பதற்கான அழுத்தத்தை நிறுத்த லக்னோ நிர்வாகம் மார்ச் 20 ல் முடிவு செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்டெடுக்கும் நடைமுறை, சிக்கலாக இருப்பதாகவும், நீதிமன்ற கூடுதல் ஆய்வு தேவை என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். “நீங்கள் சேதம் விளைவித்தால் அதை மீட்க ஒரு வழிமுறை இருக்க வேண்டும்.” என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே. ” இதுவரை இது அரசியலமைப்பு பிரச்சினையாக தோன்றவில்லை. அடையாளப்படுத்துவது, அளவிடுவது மற்றும் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டால் எப்படி சொத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்ற கேள்விகள் எழும்.” என்கிறார் சஞ்சய். “நீதிமன்றம் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.” என்று கூறுகிறார் அவர். சிஏஏ மற்றும் என்ஆர்சியை விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடர உத்தர பிரதேச அரசு இதையும், சட்டப்படி கேள்விக்குரிய பிற வழிகளையும் பயன்படுத்தி வருகிறது. யாரும் தண்டிக்கப்படவே இல்லையென்றாலும், லக்னோ முழுவதும் ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 53 பேரின் புகைப்படங்கள், பெயர்கள், முகவரி ஆகியவை தாங்கிய பதாகைகள் வைக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தப் பிறகு உத்தர பிரதேச அரசு, மார்ச் மாதம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தகவல்களை வெளியிட அனுமதிக்கும் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அலகாபாத் உயர்நீதிமன்றம் இது “தன்னிச்சையானது” எனக் கூறி அதை எதிர்த்து மாநில அரசுக்கு தாக்கீது அனுப்பியது. ” நீதிமன்றங்கள்  நிலைமையைத் தக்கவைதத்துக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியில் மாநில அரசுக்கு குறுக்கே வராது என்ற நம்பிக்கையுடன், மாநில அரசு கடுமையாக நடந்து கொள்கிறது.” என்கிறார் ஹெக்டே. ” ஆனால் ஒரு நாள் இதன் அடிப்படை சட்டபூர்வமானத் தன்மை சோதிக்கப்படும்” என்கிறார் அவர்.

ஓராண்டிற்குப் பின், லக்னோவில் மானூர் சௌத்ரி மற்றும் விஷன் கானின் நிலைமைகள், வன்முறை மற்றும் காவல்துறை மிருகத்தனமக நடந்ததற்கு, அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு விலை கொடுக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.

முதல் தகவல் அறிக்கையில், கலவரம் செய்தல், அரசு அதிகாரியைத் தடுத்தல், குற்றவியல் ஆற்றலைப் பயன்படுத்துதல் மற்றும் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகியவற்றுடன் பொது சொத்துக்கள் சேதம் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சௌத்ரியின் பெயரே இல்லை‌ “அந்தப் போராட்டத்தில்  நான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. நான் வெறுமனே கடையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். சிசிடிவியில் எனது படம் இருந்ததால், என்னை பிடித்துக் கொண்டார்கள் ” என்கிறார் சௌத்ரி.

அவர் சுமார் ஒரு மாதம் சிறையில் தள்ளப்பட்டிருந்தார். “காவல் நிலையம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. சிறை என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் (காவல்துறை) எங்களுக்குச் சிறையைக் காட்டி இருக்கிறார்கள்.” என்கிறார் சௌத்ரி. ஜனவரி 18 ல் 50,000 ருபாய்க்கான இரண்டு பிணை பாத்திரங்களின் பேரில் அவருக்கு கூடுதல் மாவட்ட அமர்வு பிணை வழங்கி உள்ளது.

தனது மனுதாரருக்கு எதிராக அரசு தரப்பில் ஆதாரங்களே இல்லை. “ஒரு புகைப்படத்தை மட்டுமே சாட்சியாக காட்டி உள்ளது. அதில் அவர் தனது இரு கைகளையும் கால் சட்டைப் பையில் விட்டுக் கொண்டு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள எனது  வீட்டருகில், நின்று கொண்டிருக்கிறார்.” என்று கூறுகிறார் அவரது வழக்கறிஞர் இசார் அகமது.

பிணை அவரது பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. டிசம்பர் 26 ஆம் தேதி, அவர் கூடுதல் மாவட்ட நீதிபதி கையெழுத்திட்ட அறிவிப்பு ஒன்றை பெற்றிருக்கிறார்.  டிசம்பர் 19 அன்று, சேதமுற்ற அரசு சொத்துக்களை இழப்பீடு பெறுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ள அதில், ஒரு வாரத்திற்குள் சௌத்ரி நிர்வாகத்திடம் நேரில் வர வேண்டும் என்றும், இல்லையெனில் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. எனினும், அப்போது அவர் சிறையில் இருந்ததால் பதில் அனுப்ப முடியவில்லை.

மார்ச் 16  அன்று தாசில்தார் கையெழுத்திட்ட இன்னொரு தாக்கீது அவருக்கு வந்தது. அதில் சௌத்ரி, அரசு சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததற்காக 21.7 லட்சம் இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும், அல்லது தனது பதிலை ஏழு நாட்களுக்குள் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. பதிலளிக்கத் தவறினால் அவர் கைது செய்யப்படுவார் அல்லது அவரது சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இது போன்ற தாக்கீது சௌத்ரியின் அண்டை வீட்டார் 12 பேருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. “அதில் இரண்டு பேர் என் வீட்டிற்கு அடுத்தடுத்த வீட்டில் வசிக்கின்றனர். மிகவும் ஏழைகள். அவர்கள் சம்பாதிப்பது அவர்களுக்கே சரியாகிவிடும் எங்கிருந்து அவர்கள் அவ்வளவு பணம் தருவார்கள்” என்கிறார் சௌத்ரி.

சௌத்ரி, அவரது பங்கை செலுத்த இயலாததால், நிர்வாகம் குற்றச்சாட்டுக்களைக் காட்டி அழுத்தம் கொடுத்து,  மார்ச்சில் அவரது பழைய பொருட்கள் விற்கும் கடையை மூடி முத்திரை வைத்துவிட்டார்கள். “அது எனது தந்தைக்கு சொந்தமானது.‌ அதன் மீது இப்போது ஏல அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது” என்கிறார் சௌத்ரி. அதன்மூலம் அவர் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் வரை வருமானம் பெற்று வந்தார். மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வாழும் அவருக்கு இது ஒன்றுதான் பிழைப்பிற்கான வழி.

தாசில்தார் உமேஷ் ஏல நடவடிக்கைகள், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே எடுக்கப்படும் என்று அப்போது கூறினார்.

ஏலத்திற்கு தடை கோரும் விண்ணப்பத்தை இன்னும் கொடுக்கவில்லை என்று கூறும் சௌத்ரியின் வழக்கறிஞர் மிஸ்ரா, கடையை மூடி விட்டதால், சௌத்ரி எந்த வேலையுமின்றி வருமானமின்றியும் இருப்பதாகவும், இந்த தொற்று காலத்தில் உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளதாகவும் கூறுகிறார். அவரது மனைவிக்கு ஆதார் அட்டை இல்லாததால் அவரது குடும்ப அட்டை ரத்து செய்யப்பட்டு விட்டது. அவரது உறவினர்கள் அவருக்கு அரிசி, மாவு, பருப்பு போன்றவற்றை கொடுத்தனர் என்கிறார்.

“பிறரிடம் போய் கேட்பதற்கு எங்களுக்கு அவமானமாக உள்ளது. நாங்கள் பிச்சைக்காரர்கள் போல் ஆகிவிட்டோம். எனது பெரிய பெண்ணுக்கு 6000 ரூபாய் பள்ளிக் கட்டணம் செலுத்த இயலாததால் அவளை அரையாண்டு தேர்வுக்கு அனுமதிக்க முடியாது என அவளுடைய பள்ளி முதல்வர் கூறிவிட்டார். கொரோனா முடக்கத்தால் லக்னோவில் வேலை கிடைப்பதும் கடினமாக உள்ளது. நிறைய செலவுகள் வேறு உள்ளது.” என்கிறார் சௌத்ரி. “காவலாளி வேலையாவது கிடைக்குமா என அருகில் கேட்டுப்பார்த்தேன்.” என்கிறார். அவர், அவரது கடை மூடப்பட்டு, தொடமுடியாமல் கிடப்பதால், அந்த இடம் காடு போல்  நாசமாகி கிடப்பதாகக் கூறுகிறார். அவர் மனதில், கடையைத் திறக்க முடியுமா? என்ற ஒரே ஒரு கேள்விதான் ஓடிக் கொண்டுள்ளது. “அதை திறந்தால் என் குழந்தைகளின் செலவையாவது சரி கட்டி விடுவேன்.  200 ரூபாய் கிடைப்பது கூட கடினமாக உள்ளது.” என்கிறார் அவர்.

தொடரும் கைதுகள்

வன்முறை நடந்து முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், ராம்பூரில் வசிப்பவர்களை கைது செய்வது தொடர்கிறது. முப்பது வயதான ஜீஷன் அலி அவர்களில் ஒருவர். அவர் தாயுடனும், ஒரு இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்யும் தந்தையுடனும் வசித்து வருகிறார். அவர் மரச்சாமான்கள் விற்று, கிடைக்கும் ஆர்டர்களைப் பொறுத்து, 15,000 ரூபாய் வருமானம் ஈட்டி வந்தார்.

செப்டம்பரில்- ஆர்ப்பாட்டங்கள் நடந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு- கஞ்ச் காவல்நிலைய அதிகாரிகள், இவர் பணியில் இருந்த போது  இவரை கைது செய்ய மூன்று முறை அவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். “நான் என்ஆர்சி எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு பகுதி என்றும் அதனால் காவல் நிலையம் சென்று சரணடைய வேண்டும் என்று அவர்கள் என் தாயிடம் கூறிச் சென்றுள்ளனர்” என்று கூறிய கான், ஒரு வழக்கறிஞரை கலந்தாலோசித்து பின் செப்டம்பர் 22 ல்  மாவட்ட நீதிபதி முன் சரணடைந்தார்.

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை டிசம்பர் 21 ஆம் தேதி, ராம்பூரில் நடந்த வன்முறை தொடர்பானது. இதில் ஒருவர் உயிரிழக்க பல பொது மக்களும், காவல் துறையினரும் காயமடைந்தனர். 116 பேர் மீது குற்றம் சாட்டியுள்ள இந்த அறிக்கை அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான பேர்கள் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி உள்ளது. ஆனால் இந்த பட்டியலில் கானின் பெயரே இல்லை. கானின் வழக்கறிஞர் அன்று கொடுத்த ஒரு பிணை மனுவை அன்றே நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.

சரணடைந்த பின், இரு வார தனிமைப் படுத்தலுக்குப் பின் கான், ராம்பூர் மாவட்டச் சிறைக்கு மாற்றப்பட்டார். “சிறையில் இருப்பது போல் என்னால் சிந்தித்துக்கூட பார்க்க இயலாது. அது என்னை உடைத்து விட்டது. மிக கடினமாகவே சிறையில் அந்த நாட்களை நான் கழித்தேன். ஒவ்வொரு நாளும் மலைபோல தெரிந்தது. நான் எங்கும் ஓடி விட மாட்டேன். ஏனெனில் நான் கிரிமினல் அல்ல. எதற்காக ஓட வேண்டும்.” என்கிறார் கான்.

சிறையில் இருக்கும் போது அவரிடம் ஒரு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. “அவர்கள் எனக்கு எதிராக சாட்சிகள் இருப்பதாகக் கூறினர். நான் அப்படியானால் அவற்றை நீதிமன்றத்திற்கு கொண்டு வாருங்கள், நான் எங்கும் ஓடி விட மாட்டேன். ஏனெனில் நானே வந்து சரணடைந்துள்ளேன்.” என்று கூறியதாக தெரிவிக்கிறார். காவலர்கள் அவரிடம் எந்த புகைப்படத்தையோ, காணொளியையோ காட்டவில்லை என்கிறார் அவர்.

டிசம்பர் 21 ஆம் தேதி, ராம்பூரில் கலவரம் நடந்து கொண்டிருந்த போது, தான் வீட்டில் இருந்ததாக அவர் கூறுகிறார். “நான் எங்கும் வெளியே செல்லவில்லை. எனவே சாட்சி என்ற கேள்விக்கே இடமில்லை.” என்கிறார் அவர்.

“அன்று எதிர்ப்பு சூழ்நிலைதான் இருந்தது (ராம்பூரில்)…. எனக்குத் தெரிந்தவரை எதிர்ப்பது ஒரு உரிமை. அங்கு என்ன நடந்தது. நிலைமை எப்படி மாறியது என்பது ஊடகங்களுக்குத் தெரியும்.” என்கிறார் அவர். காவல்துறை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என செய்தித்தாள்களில் அடையாளம் காட்டுவதற்காக கொடுக்கப்பட்ட புகைப்படங்கள் தெளிவற்றவையாக இருந்தன என்று கூறும் அவர், “பெரும்பாலானவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தன” என்று தெரிவித்தார். கானின் ஒரு கேள்வி தொடர்ந்து விடையளிக்கப்டாமலே உள்ளது: “ஏன் என்னை செப்டம்பர் மாதம் கண்டுபிடித்தார்கள்?” நான் பல கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதால், செப்டம்பர் மாதம் என்னை இந்த வழக்கை நிர்வகிக்க இங்கு மாற்றினார்கள். அதற்கு மூன்று மாதங்கள் ஆனது. அந்த நேரத்தில் வேறு யாரோ இதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வந்த பிறகு இந்த கைதுகளை நடத்தத் துவங்கினேன்.” என்கிறார் விசாரணை அதிகாரி ரவீந்திர பிரதாப் சிங்.

பல அப்பாவிகளும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கான் தெரிவிக்கிறார். “எல்லோருமே தவறாக இருக்க முடியாது. நான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிலரை சிறையில் சந்தித்த போது அவர்கள் இதில் ஈடுபடவில்லை எனக் கூறினார்கள்.” என்கிறார் கான். ராம்பூர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு அக்டோபர் 9ம் தேதி பிணை கொடுத்தது. 12 ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். உத்தரவின்படி 50,000 ரூபாய்க்கான இரு பிணைப் பத்திரங்களை அவர் கொடுத்துள்ளார்.

கானின் வழக்கறிஞர் சையத் அராஃபட் ஆரிஷ், ராம்பூர் காவல்துறை தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறினார். “நான்  ஏழு பேருக்கு பிணை வாங்கி கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் அறியப்படாத குற்றவாளிகள். அதில் முஸ்லீம் அல்லாதவர் ஒருவர் கூட இல்லை. இந்த வழக்குகளைப் பார்த்தால் மத அடிப்படையில் குறி வைக்கப்படுவதாகவே தோன்றுகிறது.” என்கிறார் ஆரிஷ்.

கான் விடுதலை செய்யப்பட்ட பிறகும் அக்டோபர் மாதம் அவரது பிணை நிலைமை குறித்து விசாரித்து காவல்நிலையத்தில் இருந்து தொலை பேசி அழைப்பு வந்துள்ளது.

எனினும், அவரது கைதும், சிறைவாசமும் அவரது அன்றாடப் பணிகளில் சில மாற்றங்களைச் செய்து விட்டது. “ஒரு முறை நீங்கள் கைது செய்யப்பட்டவர் என்றால், நீங்கள் அப்பாவியாக இருந்தாலும், உங்கள் பெயர் கெட்டுவிடும். அது உங்கள் ஆளுமையைப் பாதிக்கும். இந்த சமூகம் எப்படி இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்.” என்கிறார் கான்.

இத்துடன் கூடுதலாக கான், விடுதலைக்குப்பின் தனது வியாபாரத்தை மீண்டும் துவக்க சில சிக்கல்களை சந்தித்ததாகக் கூறுகிறார். “என்னிடம் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தவர், வேறு ஒருவரிடம் வாங்க ஆரம்பித்து விட்டார். நான் 20 முதல் 25 நாட்களாக இங்கு இல்லை. சிறையில் இருந்து வந்தும் இயல்பு நிலைக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆனது. இது மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. இதை யாரும் உங்கள் முகத்திற்கு நேராக சொல்ல மாட்டார்கள். இவை எல்லாம் நீங்கள் உணர வேண்டியவை” என்கிறார் கான்.

(www.scroll.in இணையதளத்தில் விஜய்தா லால்வானி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்