Aran Sei

`உணவு இல்லை, வேலை இல்லை’- தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள்

பங்குச் சந்தைகள் மீண்டு, எழுச்சி பெற்றிருப்பதாகவும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் முன்னேற்றம் இருப்பதாகவும் சொல்லப்படும் வேளையில், கோவிட் 19 உருவாக்கிய பொருளாதார நெருக்கடி இன்னமும் யதார்த்தத்தில் மக்களை பாதிப்பதாகவே இருக்கிறது. பெருந்தொற்றால் வேலையை இழந்தவர்கள் வேலை தேடிக்கொண்டிருக்கும் போது, பெரும் திரளான மக்கள் உணவுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பெருந்தொற்றினாலும், அதை முறையே கையாளாத மத்திய அரசின் மெத்தனத்தினாலும் உருவாகியிருக்கும் இப்படியான நெருக்கடிகளைக் குறித்து திங்களன்று நடந்த இணைய வழி குறைகேட்பு நிகழ்வில் பேசப்பட்டது.

டெல்லி ரோஸி ரோட்டி அதிகார் அபியான் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுகளில் சேரிக் குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள், தினக்கூலிக்கு வேலை செய்பவர்கள், கட்டடத் தொழிலாளிகள், வீடில்லாதவர்கள், கணவரை இழந்த பெண்களின் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளிலிருந்து வந்தவர்கள் எனப் பலர் தங்களுடைய பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

“மக்களுக்கு உணவு இல்லை, வேலை இல்லை”

உணவுப் பற்றாக்குறை, உழைக்கும் மக்கள், பின் தங்கிய மக்கள் பசியில் இருப்பது இன்னும் தொடர்கிறது என்கிறது அபியான் குழு. “உணவிற்குச் சம்பாதிக்கும் அளவு வேலை மக்களுக்குக் கிடைப்பதில்லை” என்கிறது.

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும், தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வராதவர்களுக்கும் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. ஏனென்றால், இவர்களுக்கு மளிகைப் பொருட்கள் கொடுக்க வேறு திட்டங்கள் எதுவும் இல்லை.

இந்த இணையவழி முகாமில் உணவுரிமை பிரச்சாரகர்களான ஜீன் ட்ரீஸ், பத்திரிகையாளர் பமேலா பிஃபிப்போஸ், அஞ்சலி பரத்வாத், ஆனி ராஜா மற்றும் தீபா சின்ஹா ஆகியோர் அபியான் சார்பாக கலந்துகொண்டார்கள்.

நிறுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் & வேலையிழப்புகள்

தெற்கு டெல்லியில், லால் கும்பட் முகாமில் இருக்கும் சாஞ்சல் என்பவர், முழு அடைப்பு காரணமாக வீட்டு வேலைகள் செய்து வந்த இடங்களில் இருந்து நிறுத்தப்பட்டதாகவும், தினக்கூலி வேலைகள் செய்து வந்த தன் கணவருக்கும் கூலி வேலைகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். ஐந்து பேர் கொண்டது அவர்களின் குடும்பம். பல மாதங்களாகத் தொடர்ந்து வருவாய் எதுவும் இல்லாததால், அவர்கள் எடுத்துக்கொண்ட உணவின் அளவும் தரமும் குறைந்துகொண்டே இருந்தது. குழந்தைகளுக்குப் பால் கொடுக்க அவர்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. மதிய உணவுத் திட்டத்தினால் ஊட்டச்சத்தை பெற்றுக்கொண்டிருந்த மூன்று குழந்தைகளுக்குப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதனால் அதுவும் கிடைக்கவில்லை.

Photo Credit : thewire

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்குவது தடைப்பட்ட போது, டெல்லி அரசாங்கம், 2020 மார்ச் மாதத்தில் இருந்து உணவிற்குப் பதிலாகப் பணம் வழங்கத் தொடங்கியது என்கிறார் சாஞ்சல். ஆனாலும், இந்தத் தொகை மிகக் குறைவாக இருந்ததாகவும், பணமும் முறையே கொடுக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார். ஜூலை மாதம் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கும் 78 ரூபாய் மட்டுமே கிடைத்ததாகவும், இளைய குழந்தைக்கு எந்தப் பணமுமே கிடைக்கவில்லை என்றும் சொன்னார். மிகச் சமீபத்தில் சாஞ்சலுக்கு மூவாயிரம் ரூபாய் சம்பளத்திற்குக் கிடைத்திருக்கும் வேலையை நம்பியே மொத்தக் குடும்பமும் வாழ்கிறது.

குழந்தைத் தொழிலாளர்கள்

ஜகதம்பா முகாமில் இருப்பவர் 62 வயதான ராணி. கணவரை இழந்தவர். கோவிட்-19 காரணமாக வீட்டு வேலைகள் எதுவும் கிடைக்கவில்லை. மகனும் இறந்துவிட்டதால், பேரக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் இவருக்கு இருக்கிறது. குடும்ப அட்டையும் இல்லாதது இவரை மேலும் பலவீனமாக்கியிருக்கிறது. இதனால், 14 வயதான பேரன், ஜூலை மாதம் ரிக்‌ஷா இழுக்கும் வேலையைச் செய்யத் தொடங்கியிருக்கிறான். பிறகு, வீட்டிற்கு ஒரு நிலையான வருவாயை ஈட்டித் தர வீட்டுவேலைகள் செய்யத் தொடங்கியிருக்கிறான்.

நிறைய தம்பதியினருக்குப் பெருந்தொற்று காரணமாக வேலைகள் பறிபோன பிறகு, மீண்டும் வேலைகள் கிடைக்கவில்லை. சேரி முகாமில் இருக்கும் சோனிக்கு ஐந்து குழந்தைகள். அவரும், டெலிவெரி பாய் வேலை செய்துகொண்டிருந்த அவருடைய கணவரும் மாதத்திற்கு 15,000 ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தனர். பெருந்தொற்று காரணமாக வேலையை இழந்துவிட்ட அவர்கள், இப்போது முழு அடைப்பு தொடங்கி பல நாட்களாக வேலையில்லாமல் இருக்கின்றனர்.

இவர்களிடமும் குடும்ப அட்டை இல்லை. இணைய கூப்பனுக்கு விண்ணப்பித்த பிறகு ஒரே ஒரு முறைதான் அதை வைத்து மளிகைப் பொருட்கள் வாங்க முடிந்ததாம். கடன் வாங்கி குடும்பத்தை நடத்திக்கொண்டிருப்பதால், 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சோனியின் மகன் மாதம் 5000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கிறான்.

பாதிக்கப்படும் குழந்தைகளின் கல்வி

குடும்பச் சுமையினால் வேலைக்குப் போகக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும் சில குழந்தைகளைத் தவிர, மற்ற குழந்தைகள் பலரின் கல்வியும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஐம்பதற்கு மேற்பட்ட மக்கள், தங்கள் குழந்தைகளிடம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட் ஃபோன்கள் இல்லையெனவும், வகுப்புகளுக்கு ஃபோன்களை ரீசார்ஜ் செய்ய வசதி இல்லையென்றும் தெரிவித்தனர்.

மாற்றுத் திறனாளிகள் பலருடைய பிரச்சினைகள் குறித்தும் இணையவழி பேசப்பட்டது. நடைபாதையில் வாழும் மாற்றுத்திறனாளிகளில் பலர் தாங்கள் கூலி வேலைகள் செய்தோ, பிச்சை வாங்கியோ பிழைத்துக்கொண்டிருந்ததைக் குறித்து பேசினார்கள். மாற்றுத்திறனாளிகளான மஸர் பூங்காவைச் சேர்ந்த சஞ்சய் குமார், அஃப்ரோஸ் ஆலம் மற்றும் ஷ்யாம் சிங் ஆகியோர் தினசரி உணவுக்கான போராட்டம் கொடுமையாக இருப்பதாகச் சொன்னார்கள்.

உணவுப் பற்றாக்குறை

முழு அடைப்பு கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு யாருக்கும் உணவு தேவைப்படவில்லை எனக் காப்பகங்களிலும் பள்ளிக்கூடங்களில் சமைத்த உணவு பரிமாறப்பட்டு வந்த திட்டத்தையும் டெல்லி அரசு ரத்து செய்திருந்தது. காப்பகங்களில் இருந்த பெண்கள், உணவு ரத்து செய்யப்பட்ட பிறகு எப்படி உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்பது குறித்துப் பேசினார்கள்.

கொனாட் பகுதியில் இருக்கும் காப்பகத்தில் தங்கியிருக்கும் பூஜா, மின் கட்டண ரசீது இல்லாமல் குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் ஏற்கப்படாது என உணவுத்துறை தெரிவித்ததால் குடும்ப அட்டை கிடைக்கவில்லை என்று சொன்னார். வீடில்லாமல் காப்பகத்தில் இருந்ததாகச் சொன்ன பிறகும், யாரும் காது கொடுத்து கேட்கவில்லை.

சமீபத்தில் பிரசவித்த பெண்களுக்கான அங்கன்வாடி சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன; கர்ப்பமான பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்குச் சமைத்த உணவு கொடுக்கப்படும் திட்டமும் கைவிடப்பட்டிருக்கிறது என்றனர் அப்பகுதி பெண்கள்.

குடும்ப அட்டை விண்ணப்பிப்பதும் சிக்கலாகவே இருக்கிறது. முறையே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்திருந்தாலும், குடும்ப அட்டைகள் கிடைக்கவில்லை எனச் சிலர் தெரிவித்தனர். முறையாக முகவரி நிரூபண ஆவணங்கள் இல்லாததால், குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் சமர்ப்பித்தும் சிக்கலாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Photo Credit : thewire

வழக்கமான வாழ்வாதார வழிகள் எல்லாம் பெருந்தொற்றால் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் இணையவழிச் சந்திப்பில் பகிரப்பட்டது.

குழந்தை பிறப்பு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் ஜஹாங்கிர்புரியின் திருநர் சமூகத்தைச் சேர்ந்த ரேஷ்மா, மஹரப் மற்றும் ரீனா ஆகியோர், பெருந்தொற்று காரணமாக அந்த வருவாய் இல்லாமல் போனதாகச் சொல்கின்றனர்.
பெருந்தொற்று தொடங்கிய போது, டெல்லி உயர்நீதிமன்றத்தில், குடும்ப அட்டைகள் இல்லாதோருக்கு உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என அபியான மனு கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. “விசாரணையின் போது, மக்களின் உணவுக்கான உரிமையைப் பாதுகாக்கவும், டெல்லியில் யாரும் பசியோடு உறங்கப்போகக் கூடாது என்பதை உறுதி செய்யவும், சில முக்கியமான வழிகாட்டுதல்களை டெல்லி நீதிமன்றம் வழங்கியது. இதற்கு இணங்கிய அரசாங்கம், தற்காலிக இணையவழி கூப்பன் திட்டத்தை வைத்து மக்களுக்கு மளிகைப் பொருட்களைக் கொடுத்தது. குடும்ப அட்டை இல்லாத 54 லட்சம் பேரிடம் இருந்து அரசிற்கு இணைய-கூப்பன் விண்ணப்பம் வந்தது. இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட மளிகைப் பொருட்கள் பிறகு நிறுத்தப்பட்டது” என அபியான குழு தெரிவித்தது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்