Aran Sei

பாகிஸ்தானில் இந்து கோவில் தாக்கப்பட்ட விவகாரம் – 50 பேரை கைது செய்த சட்ட அமலாக்கத்துறையினர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தின் இந்து கோவில் தாக்கப்பட்டது தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் உள்ளிட்ட 50 பேரைப் பாகிஸ்தான் சட்ட அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்து கோவிலைப் பாதுகாக்க அதிகாரிகள் தவறிவிட்டதாக அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தெரிவித்ததற்கு அடுத்த நாள் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த புதன்கிழமை (04.08.2021) 150 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ரஹீம்யார் கான் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலில் சிறுநீர் கழித்ததற்காக கைது செய்யப்பட்ட 8 வயது இந்து சிறுவன் உடனடியாக விடுவிக்கபட்டதை கண்டித்து, அங்கிருந்த இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கோவில் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகளைப் பகுப்பாய்வு செய்ததன் மூலம் சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் உஸ்மான் புஸ்தார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

”எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வோம். மேலும், கோவிலின் மறுசீரமைப்பு பணிகள் மூழு வீச்சில் நடைபெற்று வருகின்றன” என அவர் குறிப்பிட்டார்

ரஹீம் யார் கான் மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி ஆசாத் சர்பராஸ், “சந்தேகிக்கப்பட்ட முக்கிய நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக 150க்கு மேற்பட்டவர்கள்மீது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறியதற்காக அதிகாரிகளுக்குக் கண்டனங்களைத் தெரிவித்த நீதிமன்றம், இந்தச் செயல் உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானிற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என குற்றம்சாட்டியது.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்