Aran Sei

மோடி அரசை விரட்டும் ‘பெகாசிஸ்’ என்னும் பிசாசு – அ.மார்க்ஸ்

பெகாசிஸ் அயோக்கியத்தனம் அம்பலமானதை ஒட்டி இப்போது பாஜக தலைவர்கள் இதைச் சமாளிக்குமாறு தங்கள் கட்சிக்காரர்களைக் களம் இறக்கிவிட்ட செய்தியை இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தோம். அசாம் முதல்வர் சர்மா இன்று ஆம்னெஸ்டி இண்டெர்னேஷனல் மீது விழுந்து பிராண்டியுள்ளார். ஆம்நெஸ்டிதான் இப்படித் தாங்கள் அம்பலப் பட்டதற்குக் காரணமாம். அதை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டுமாம்.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்த கையோடு அவர்கள் மனித உரிமை அமைப்புகள் மீது குறி வைக்கத் தொடங்கினர். ஆம்னெஸ்டி போன்ற அமைப்புகள், தாங்கள் இங்கே வேலை செய்யமுடியாத சூழல் உருவாகிவிட்டதை வெளிப்படையாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து ஆம்னெஸ்டி அலுவலகங்கள் சோதனை இடப்படுவது, அதன் கணக்குகள் முடக்கப்படுவது ஆகியவற்றின் பின்னணியில் சென்ற செப்டம்பரில் அது தன் மனித உரிமைப் பணிகளை இங்கு நிறுத்திக் கொள்வதாக அறிவித்ததை அறிவோம் . அப்படியும் ஆம்னெஸ்டி மீது இவர்களின் ஆத்திரமும் வெறியும் குறையவில்லை என்பதைத்தான் சர்மாக்களின் இந்த வெறித்தனமான பேச்சுகள் இன்று நிறுவுகின்றன.
பெகாசிஸ்ஸின்  இந்த உளவு மென்பொருளை (software) NSO குழுமம் விற்பனை செய்கிறது. இதன் மூலம் 50,000 டெலிபோன் உரையாடல்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளன என இன்று செய்திகள் வருகின்றன. இப்படி உளவு பார்க்கப் பட்டவர்களில் பல முக்கிய இந்தியப் பத்திரிகையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள், நரேந்திரமோடி அரசை விமர்சிப்பவர்கள், வழக்குரைஞர்கள், ராகுல் காந்தி உட்பட முக்கிய எதிர்க் கட்சியினர் வேவுபார்க்கப்பட்டுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.
கோவிட் 19 நிர்வாகத்தில் தோல்வி, உலகிலேயே ஆக அதிக அளவில் இந்தப் பெருந் தொற்றிற்குப் பலிகொடுத்த நாடுகளில் ஒன்றாக இந்தியா ஆகி இருப்பது, பெட்ரோல் மற்றும் சமையல் கேஸ் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு எட்டாத உயரங்களை எட்டியுள்ளது, பீமா கொரேகான் நடவடிக்கைகள் போன்றவற்றில் இவர்கள் உலகளவில் கண்டிக்கப்படுவது, கைது செய்யப்பட்ட அறிவுஜீவிகளின் லேப்டாப்களில் அதன் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் வெளியிலிருந்து அவர்கள் சதித்திட்டத்தில் ஈடுபடார்கள் எனப் பொய் “ஆதாரங்களை” திணித்தது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இங்கு கோவிட் நோயாளிகள் யாரும் சாகவில்லை என அபத்தமாக மாநிலங்கள் அவையில் சொல்லி மரியாதைக்குரிய பல மருத்துவ நிபுணர்களின் கண்டனத்துக்குள்ளாகி இருப்பது எனப் பல திசைகளில் மொத்துப் படும் இன்றைய ஆட்சியை இன்று ஒரு பிசாசைப்போல இந்த ‘பகாசஸ்’ விவகாரம் ஆட்டி வைக்கிறது.
இந்த பெகாசிஸ் விவகாரத்துக்கு எதிராகக் களம் இறங்குங்கள் என பாஜக/ ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் தம் அணிகளுக்குக் கட்டளை இட்டுள்ள செய்தியை இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தோம். இப்போது சங்கிகள் களம் இறங்கி விட்டனர்.
”நாங்கள் இந்த பெகாசிஸ் மென்பொருளை விற்பனைதான் செய்கிறோமே ஒழிய அதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள், யாரை வேவு பார்க்கிறார்கள் என எங்களுக்குத் தெரியாது எனச் சொல்லிக் கழன்று கொள்கின்றனர். கள்ளத் துப்பாக்கி செய்து விற்கும் ஒரு கும்பல் நாங்கள் துப்பாக்கியைச் செய்துதான் கொடுக்கிறோமே ஒழிய அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்கிறான், யாரைக் கொல்கிறான் என்று எங்களுக்குத் தெரியாது எனச் சொன்னால் ஒரு அரசு விட்டுவிடுமா?
“நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என NSO வும் இப்போது சொல்லியுள்ளது. இது எப்படி இருக்கிறதென்றால்? இவர்களே ஆயுதங்களைக் கொடுப்பார்களாம். பிறகு ஆயுதம் வாங்கியவன் அதை வைத்துக் கொண்டு என்ன செய்தான் எனத் துப்பறிந்து தண்டிப்பார்களாம். வேவுப் பட்டியலில் ஒரு தொலைபேசி எண் இருந்தது என்பதாலேயே அந்த எண் வேவுபார்க்கப்பட்டது என்றும் சொல்ல முடியாதாம். ராகுல் காந்தி போன்றோரின் தொலைபேசி எண்கள் பட்டியலில் உள்ளது என்றால் பின் அவை வேவு பார்ப்பதற்காக அன்றி வேறு எதற்காக இருந்திருக்கும்? ”கேப்பையில நெய் வடியுதுன்னா கேக்கிறவனுக்குப் புத்தி எங்கே போச்சு” என்று செத்துப்போன என் பாட்டி அடிக்கடி சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
இப்போது காங்கிரஸ் கட்சி இப்படி வேவு பார்க்கப்பட்டது குறித்து சுதந்திரமான ஆய்வு செய்வது பற்றிச் சொல்லியுள்ளது. நல்லது. ஆனால் அதனால் என்ன பயன் விளையப் போகிறது? பீமா கொரேகான் வழக்கில் இரண்டாண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ள ரொனா வில்சனின் மடிக் கணினியில் இருக்கும் சதித்திட்ட “ஆதாரங்கள்” வெளியிலிருந்து திணிக்கப்பட்டவை என்பது இத்துறையில் உலகின் ஆக வல்லமையான அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்றால் இன்று அம்பலப்படுத்தப் பட்ட பின்னும் இன்று நடந்துள்ளது? சிறையில் இருப்பவர்கள் சிறைவாசத்தின் ஊடாகவே செத்துக் கொண்டிருப்பதுதானே தொடர்கிறது.
”இப்படி உளவு பார்க்கும் மோடி அரசை எதிர்த்து எதிர்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என அறை கூவல் விடுகிறார் மம்தா பானர்ஜி. மிகக் கடுமையான சொற்களினால் அவரின் கண்டனம் வெளிவந்துள்ளது. ”ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் எனும் ஜனநாயகத்தின் மூன்று ஆதாரங்களையும் பெகாசிஸ் ஊடுருவி விட்டது” – என்று அவர் சீறியுள்ளார். ”உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டும்” என அறைகூவல் விடுக்கிறார்!
இதெல்லாம் என்ன? இப்படியான அப்பட்டமான அத்து மீறல்களிலிருந்து தங்களையும் மக்களையும், இந்த ஜனநாயகத்தையும் காக்க வேண்டும் என மக்களால் தேர்ந்த்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நீதிமன்றத்தின் முன் வீழ்ந்து கிடப்பதென்றால்….. இதெல்லாம் என்ன?
எல்லாம் எங்கு போய் முடியப் போகிறது?
கட்டுரையாளர் :அ.மார்க்ஸ்
ஓய்வுபெற்ற பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்