Aran Sei

கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேறிய பொது காப்பீடு திருத்த மசோதா: ஜனநாயகத்தின் படுகொலை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

மாநிலங்களவையில் அவைக்காவலர்களால் பெண் உறுப்பினர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 11), மாநிலங்களவையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் அரசின் பங்கைக் குறைக்க அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா மக்களவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு ஒத்திவைப்புகளுக்கு பின்னர், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு, நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) மதியம் 3 மணிக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்திருந்தது. கூட்டத்தில் பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி, மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என வாதிட்டார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தற்கு மாறாக மசோதா இருப்பதாக குற்றம்சாட்டிய விஜய் சாய் ரெட்டி, “2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தைத் தனியார்மயமாக்க இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த மசோதா நான்கு பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது” என்று தெரிவித்திருந்தனர்.

”தனியாருக்கு 51% பங்குகளை விற்க அனுமதியளிப்பதன் மூலம், நிறுவனத்தின் கட்டுப்பாட்டைத் தனியாருக்கு வழங்குவதை மசோதா முன்மொழிகிறது. இது நிதியமைச்சர் முன்மொழிந்தது அல்ல.” என்று விஜய் சாய் ரெட்டி கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11), அம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு முயன்ற போது, மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு  அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கோரியுள்ளன.

இக்கோரிக்கை ஏற்க மறுக்கபட்டதைத் தொடர்ந்து, “இந்த ஜனநாயகத்தின் கொலையை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எப்படி இதை அனுமதிக்கலாம் என்று நான் அவைத் தலைவரிடம் கேட்கிறேன்.” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் உறுப்பினர் மனோஜ் கே ஜா கூறியுள்ளானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பினோய் விஸ்வம் பத்திரிகையாளர்களுக்கான மேஜையில் ஏற முயன்றுள்ளார். அதைத்தொடர்ந்து, அவைத் தலைவர் அவையை ஒத்தி வைத்துள்ளார்.

சில நிமிடங்களில், 10 க்கும் மேற்பட்ட பெண் அவைக்காவலர்களும் 50 ஆண் அவைக்காவலர்களும் பத்திரிகையாளர்கள் மேசையைச் சுற்றி மனிதச் சங்கிலியை உருவாக்கியுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னேற முடியாத வண்ணம், தடுப்பு அமைத்துள்ளனர்.

மீண்டும் அவை கூடியதும், காங்கிரஸை சேர்ந்த ரிபுன் போரா மற்றும் சையத் நசீர் ஹுசைன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினாய் விஸ்வம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எலமரம் கரீம் ஆகியோர் பத்திரிகையாளர்கள் பகுதிக்குச் செல்ல முயன்று, அவை காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது வரிசையில் இருந்த சிவசேனா உறுப்பினரும் அவைக்காவலர்களுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸின் போரா ஒரு கட்டத்தில் தொலைக்காட்சித் திரை வைக்கப்பட்டுள்ள மேடையில் ஏறி நின்றுள்ளார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜனநாயகத்திற்கு அவமதிப்பு நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

“நாங்கள் அனைவரும் அமைதியை விரும்புபவர்கள். பெண் உறுப்பினர்கள் இங்கு அவமதிக்கப்படுகிறார்கள். அவைக்காவலர்கள் அரண் போல இணைந்துக்கொண்டு அவர்களை தள்ளுகிறார்கள். நாங்கள் பாதுகாப்பாக இல்லை. எங்கள் பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பாக இல்லை. எனவே நாங்கள் போராடுகிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுகேந்து சேகர் ரே, இந்த மசோதாவை முதலாளிகளுக்கு பயனளிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்படுவதால் எதிர்ப்பதாக கூறியுள்ளார்.

அவைக்கு வெளியே பேசிய ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங், இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்த்தால், விரைவில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவசேனா உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, ஆண் அவைக்காவலர்கள் பெண் உறுப்பினர்களை பலவந்தமாக வெளியேற்ற முயன்றனர் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எலமரம் கரீம், இன்று அவைக்குள் போர் மூண்டது போன்ற சூழல் இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஷரத் பவார், “எனது 55 ஆண்டு கால நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்க்கையில் இதுபோன்ற காட்சிகளை நான் பார்த்ததில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்