எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) அதிகார வரம்பை ஒன்றிய அரசு அதிகரித்திருப்பதற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பி.எஸ்.எஃப் போன்ற மத்திய முகமைகளுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் பின்வாசல் வழியாக பஞ்சாப் மாநிலத்தை, யூனியன் பிரதேசமாக மாற்ற ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசின் இந்த முடிவு ஏற்கனவே பலவீனமடைந்திருக்கும் கூட்டாட்சி தத்துவத்தை மேலும் பலவீனப்படுத்தி, மாநில அரசை ஒரு நகராட்சி நிலைக்கு சுருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
”இது பஞ்சாபிகளின் பெருமை, கௌரம் மீதான கடுமையான அடியாக இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்
”இந்திய அரசியலமைப்பில் பட்டியலில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடுவது துரதிருஷ்டவசமானது” என பாதல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
”மாநில அரசின் பட்டியலில் உள்ள விவசாயத்திற்கு மூன்று சட்டங்களை நடைமுறைப்படுத்திய பாஜக அரசு, தற்போது பி.எஸ்.எஃப்பிற்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் மாநில பிரச்னையான சட்டம் ஒழுங்கில் தலையிடுகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், பி.எஸ்.எஃப் அதிகார வரம்பைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றின் மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தின் மீது செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பிரகாஷ் சிங் பாதல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.