Aran Sei

`கல்விக் கட்டணம் கேட்டுப் பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது’ – அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் பெற்றோர்களைக் கட்டணம் செலுத்தச் சொல்லி நிர்பந்திக்கக் கூடாது எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் நிலையில் பள்ளிக் கட்டணத்தை முழுமையாகக் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டு இருந்தது. இதனால் பகுதி பகுதியாக 75 சதவீதக் கட்டணத்தைத் தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

செப்டம்பர் 30 வரை 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை வசூலிக்கத் தற்போது சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று ஈரோடு – நம்பியூர் கூடக்கரையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது, “கல்விக் கட்டணம் வசூல் செய்வது குறித்துப் பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று பரவும் என்று அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் பள்ளிகளைத் திறப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள், மாணவர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பிற்கு 18,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் ஆனால், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்