பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சிறப்பு திரையிடல் மற்றும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், பராசக்தியின் தாக்கம் இன்னும் 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி, மக்களுக்கு பலனை கொடுக்காது என்ற கருத்தை பராசக்தி பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் முற்போக்கு கருத்துக்களை பேசும் திருப்புமுனை படமாக அமைந்தது பராசக்தி. 1952ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி சிவாஜி கணேசன் நடிப்பில் மு.கருணாநிதியின் வசனத்தில் உருவான பராசக்தி படம் வெளியானது. பராசக்தியை திமுக தொண்டர்கள் தங்கள் கட்சித் திரைப்படமாகப் பார்க்க, எதிர்க்கட்சியினர் படத்தைத் தடைசெய்யும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால், அதற்குப் பிந்தைய 70 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு இந்தத் திரைப்படம் முக்கியப் பங்களிப்பைச் செய்யும் படமாக அமைந்துள்ளது. திராவிடர் இயக்கத் திரைப்படங்களில் திருப்புமுனையாக அமைந்த பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.
இதனையொட்டி சென்னையில் பராசக்தி திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் விவாதம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “அரசியல் அதிகாரம் இல்லாத சமூக நீதி, மக்களுக்கு பெரிய பலனை கொடுக்காது என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார். பராசக்தி படத்தை மீண்டும் பார்த்த போது இதுதான் தோன்றியது. மக்களின் எளிய பிரச்சினைகளை, பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை சினிமாவின் மூலம் பேசி இருக்கிறார்.
‘பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்’ – இயக்குகிறார் வெற்றிமாறன்
சினிமாவின் மூலம் மக்களிடம் அரசியலை பேசும் சூழலை உருவாக்கிய திரைப்படம் பராசக்தி. சமூக பொறுப்புடன் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் பிடித்த படமாக பராசக்தி இருக்கும். பராசக்தி படத்தின் தாக்கம், இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் இருக்கும். பராசக்தி படத்திற்கு அப்போதும் எதிர்ப்புகள் இருந்திருக்கும். நாம் ஒரு நம்பிக்கையுடன் ஒரு கருத்தை முன் வைக்கும் போது, எதிர்ப்புகள் வரும். அதனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறுகையில், பராசக்தி படம் பற்றிய கருத்தரங்கமாக நடைபெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் பராசக்தி படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய காலக்கட்டத்தில் பேசப்பட்டு வரும் கருத்துக்களை பராசக்தி படம் பேசி இருக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன், ஆணித்தரமான கருத்துக்கள் பேசப்பட்டுள்ளது. சமூகம், மத அரசியல், ஏற்றத்தாழ்வுகள், பெண்கள் என பல்வேறு கருத்துக்களை பராசக்தி படம் பேசி இருக்கிறது.
பராசக்தி படம் புதிய படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டால், எதிர்ப்புகள் அதிகமாகவே இருக்கும். ஏனென்றால், மதத்தை வைத்து அரசியல் செய்யக் கூடியவர்கள், எந்தப் படத்திலும் விவாதம் இருக்க கூடாது என்ற கருத்தையே முன் வைக்கிறார்கள். பெண்கள் என்று வரும் போது, தனிப்பட்ட தாக்குதல் நடத்தினால் ஓரம் போய்விடுவார்கள் என்று கருதுகிறார்கள். இவையெல்லாம் கடந்து அரசியல் உரையாடலோ, சமூகம் பற்றிய உரையாடலோ முன்வைக்கப்பட வேண்டும். அப்படியே முன்வைக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
ராமர் பாலம் கட்டுக்கதையா? | சங்கிகளின் முதுகில் குத்திய பாஜக | Aransei Roast | BJP | Ram Setu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.