Aran Sei

`அவரின் உண்ணாவிரதம் கைதிகளின் குரலை அறிய உதவியது’ – மஹேர் அல் அக்ராஸ் மனைவி

credits : cnn business

ஸ்ரேலின் சட்டத்திற்குப் புறம்பான கைது நடவடிக்கையை எதிர்த்து கடந்த 103 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் மஹேர் அல் அக்ராஸ் தன்னுடைய உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார்.

பாலஸ்தீனத்தின் ஜெனின் மாநகரைச் சேர்ந்த 49 வயதான மஹேர் அல் அக்ராஸ் கடந்த ஜுலை மாதம் முதல் இஸ்ரேலின் நிர்வாகத் தடுப்புக் காவலில் உள்ளார். நிர்வாகத் தடுப்புக்காவல் என்ற பெயரில் இஸ்ரேல் அரசு யாரையும் விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் கூட சிறையில் வைக்க முடியும். இதை எதிர்த்து மஹேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

மஹேர் அல் அக்ராஸ் இஸ்ரேலை அழிக்க நினைக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அவருடைய செயல்பாட்டிற்காக ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், மஹேர் இதை மறுத்துள்ளார்.

“கடந்த நவம்பர் 6 ஆம் தேதி மஹேரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, உடல் உறுப்புகள் செயலிழந்து வருகிறார். அவர் விரைவில் மரணமடைவார்” என்று இஸ்ரேல் மருத்துவர்கள் கூறியதாக மஹேரின் மகள் தெரிவித்துள்ளார்.

“ `தன்னை பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினால்தான் உண்ணாவிரதத்தைக் கைவிடுவேன்’ என்று என் தந்தை கூறுகிறார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் மிகுந்த வலியில் உள்ளார். ஆனால் இஸ்ரேல் அதற்குச் சம்மதிக்க மறுக்கிறது. விடுதலை மட்டுமே அவருடைய உயிரைக் காப்பாற்றும்” என்று அவருடைய மகள் கூறியுள்ளார்.

மஹேரை விடுதலை செய்ய இஸ்ரேல் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ஆனால், அவரை நவம்பருக்கு மேல் தடுப்புக் காவலில் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் மஹேர் தன்னுடைய உண்ணாரவிரதப் போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளும், இஸ்ரேலைச் சேர்ந்த மருத்துவர்கள் அமைப்பும் மஹேரை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்நிலையில் 103 நாட்களுக்குப் பிறகு தன்னுடைய உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார் மஹேர். வருகின்ற நவம்பர் 26-ம் தேதி மஹேரை விடுதலை செய்வதாக இஸ்ரேலிய அதிகாரிகள் அறிக்கை விடுத்துள்ளனர். அவரது பெண் குழந்தை அவருக்கு உணவை ஊட்டிவிட்டு உண்ணாவிரத்தை முடித்து வைத்தது. அந்த உணவு மிகவும் ருசியாக இருப்பதாக மஹேர் தன் குழந்தையிடம் கூறியுள்ளார். அவரது உடல்நிலை சீரடைய அடுத்த இருபது நாட்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுவார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருடைய விடுதலை குறித்து பேசிய மஹேரின் மனைவி தக்ரீத் அல் அக்ராஸ் ”இந்த வெற்றி என்னுடையது அல்ல; நிர்வாகத் தடுப்புக் காவலுக்கு எதிராகப் போராடிய அனைவரின் வெற்றி” என மஹேர் கூறியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய தக்ரீத் “ அவரின் உண்ணாவிரதம் கைதிகளின் குரலையும் நிர்வாகத் தடுப்புக் காவலில் இருப்பவர்கள் படும் துன்பங்களையும் உலகம் அறிந்துகொள்ள உதவியது” என அனடோலு ஏஜென்சியிடம் கூறியுள்ளார்.

இதுவரை 4,400 பாலஸ்தீனிய அரசியல் கைதிகள் இஸ்ரேலியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீனிய அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் 39 பெண்களும் 155 குழந்தைகளும் அடங்குவர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்