Aran Sei

‘ஜிஎஸ்டி அமலுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன’ – ஜிஎஸ்டி கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன்

மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பு மருந்துகள், ரெம்டெசிவிர் மற்றும் டொசிலிசுமப் அடங்கிய மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.

இந்திய ஒன்றியத்தின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இணையவழி காணொலியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, “சீனாவிலிருந்து அமெரிக்கா வரை அனைத்து நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள் அல்லது மாநகரங்களுக்கு, நிதி அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதில், இந்தியா கிட்டத்தட்ட எல்லாவற்றையும் விட பின்தங்கியிருப்பதை நாங்கள் கவனிக்கிறோம். நம் வரலாற்றைச் சார்ந்த காரணங்களால், மத்திய அரசாங்கத்துடன் நேரடி வரிவிதிப்புக்கான அனைத்து அதிகாரங்களும் குவியும்படியும்,  மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே மறைமுக வரிவிதிப்பு அதிகாரங்களைப் பிரித்து வழங்கிடவும் நம் மதிப்புமிக்க அரசியலமைப்பு வழிவகுத்தது. இது இந்தியாவுக்கு மிகவும் தனித்துவமானது.  ஏனென்றால், பெரும்பாலான நாடுகள் நேரடி வரிவிதிப்பில் சில அதிகாரங்களையும்  மறைமுக வரிவிதிப்பின் பெரும்பாலான அதிகாரங்களையும் மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளது. மேலும், சில நாடுகளில் இவை மாவட்டங்களுக்கும் மாநகரங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.” என்று அவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கான ஆகிஸிஜன் செறிவூட்டிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு கேட்டு வழக்கு: முடியாதென்று மறுத்த ஒன்றிய அரசு

“நம்  அரசியலமைப்பு எழுதப்பெற்று  70 ஆண்டுகாலத்தில், பல திருத்தங்களை மேற்கொண்டதால், ஒரு வளர்ந்து வரும் ஆவணமாக நிரூபிக்கப்பட்டது.  ஆயினும்கூட, உலக அளவில் அதிகரித்துவரும் அதிகாரப் பகிர்வின் அனுபவத்திலிருந்து வேறுபட்ட நிலையில், இந்தியா எதிர்திசையில் சென்றுள்ளது. அதாவது, மத்திய அரசாங்கத்திடம் அதிகாரங்கள் அதிக அளவில் குவிந்தது. உண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், நம்  அரசியலமைப்பில் ஒருபோதும் கற்பனை செய்யப்படாத அளவிற்கு, மத்திய அரசாங்கத்திடம்  அதிகாரங்கள் குவிந்துள்ளன.” என்று பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தற்போதைய நிலையில் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் விளிம்பு நிலை அல்லது எதிர்மறையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு 2021-22-ல் பாதுகாக்கப்பட்ட வருவாய் மற்றும் எதிர்பார்ப்பு வருவாய் இடையிலான இடைவெளியை மத்திய அரசின் நிதியில் இருந்தோ, வெளிச்சந்தையில் கடன் ஏற்பாட்டின் மூலமோ மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்ய வேண்டும். மேலும், கொரோனா பாதிப்பு அடிப்படையில் இழப்பீடு ஏற்பாட்டை ஜூலை மாதத்துக்குப் பின்னும் நீட்டிக்க வேண்டும்.” என்று அவர் அக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

‘ஜிஎஸ்டியால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது’ – ஓ.பன்னீர்செல்வம்

“தாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்குகளுக்கு விதிக்கப்படும் தாமத கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான சட்டக்குழுவின் பரிந்துரையை வரவேற்கிறோம். இருப்பினும், பெருந்தொற்றைக் கணக்கில் கொண்டு, இதைச் செயல்படுத்தும் காலத்தை ஆகஸ்ட் 31லிருந்து செப்.31 ஆக நீட்டிக்கலாம். மேலும், மாநில அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகள், ரெம்டெசிவிர், டொசிலிசுமப் அடங்கிய மருந்துகள்மீது வரிவிலக்கு அளிக்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்களுக்குப் பூஜ்ய வரி விதிக்கமுடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக எழும் சிக்கலை உரியசட்ட வரைவுகள் மூலம் தீர்க்கலாம்.” என்று பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

“வரிவிகித பரிசீலனைக் குழு பரிந்துரைகளைப் பொறுத்தவரை, எந்த ஒரு நபரும், மாநிலம் மற்றும் மத்திய அரசுகள் அல்லது லாபநோக்கு இல்லா மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக இறக்குமதி செய்யும் கொரோனா பெருந்தொற்றுக்கான குறிப்பிட்ட பொருட்களின் மீதான தற்காலிக ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விலக்கு மற்றும் மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டி, தயாரிப்பு கருவி, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மற்றும் கொரோனா பரிசோதனை கருவிகள் ஆகியவற்றுக்கான வரி குறைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு : பொருளாதார மறுமலர்ச்சியல்ல – பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

மேலும், “டை எத்தில் கார்பமைசின் மாத்திரைகளுக்கு வரி குறைப்பு, கப்பல் பழுதுபார்ப்புக்கு 18 லிருந்து 5 சதவீதமாக வரி குறைப்பு, சில பொருட்கள் சேவைகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள தெளிவுரைகள், அங்கன்வாடிகளுக்கு வரிவிலக்கு நீட்டிப்பு உள்ளிட்ட பரிந்துரைகளை நாங்கள் ஏற்கிறோம்.” என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி  கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்