Aran Sei

இந்து கோவிலை இடித்த அடிப்படைவாதிகள் : புனரமைக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

Image Credits: Deccan Herald

பாகிஸ்தானில் கடந்த வாரம் ஒரு தீவிர இஸ்லாமியக் கட்சியின் ஆதரவாளர்கள் தலைமையிலான கும்பல் இந்து கோவிலுக்குத் தீ வைத்து இடித்தனர். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கோவிலின் புனரமைப்பு பணியைத் தொடங்குமாறு கோயில் அறக்கட்டளை வாரியத்திற்கு ஆணையிட்டு  தீர்ப்பளித்துள்ளது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக வடமேற்கு நகரமான கரக்கில் கோவில் தகர்க்கப்பட்டது. இதனை மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை இந்து சமூகத்தினர் கண்டித்தனர்.

பாகிஸ்தானில் தகர்க்கப்பட்ட இந்து கோவில் : கடும் நடவடிக்கை எடுத்த அரசு

கோயிலைப் புதுப்பிக்க இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றதையடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சாட்சிகள் கூறியதன்படி, இந்த கும்பல் பாகிஸ்தானில் உள்ள ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் ஆதரவாளர்களால் வழிநடத்தப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஒரே இரவில் நடந்த சோதனையில் 14 பேரைப் பாகிஸ்தான் காவலர்கள் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இந்தத் துயர சம்பவம் குறித்து பாகிஸ்தான் தலைமை நீதிபதி கவலை தெரிவித்தார் என்று லைவ் லா செய்தி வெளியிட்டது. அப்போது இந்த வழக்கு ஜனவரி 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இன்று நடைபெற்ற விசாரணையின் போது, ​​தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து அகரமிப்புகளை அகற்றவும், அகரமிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

கழுத்தறுத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் : குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

கராக் சம்பவம் “பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று நீதிபதி குல்சார் அகமது தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் மத சொத்துக்கள் மற்றும் ஆலயங்களை நிர்வகிக்கும் ஒரு சட்டப்பூர்வ குழுவாக இந்த இந்து கோயில் அறக்கட்டளை  செயல்பட்டுவருகிறது.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார், அந்த நேரத்தில் பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 92 காவல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்றும் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

“இடைநீக்க நடவடிக்கை மட்டும் போதாது” என்று கூறிய நீதிபதி விரிவான தீர்ப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்