Aran Sei

இறை தூதரை நிந்தித்ததாக பெண் மீது குற்றச்சாட்டு – தூக்கு தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

பாகிஸ்தானில், மதத்தை நிந்திக்கும் வகையில் நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெண்ணுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2020ஆம் ஆண்டு, அனிகா அட்டிக் என்ற பெண்ணிற்கு எதிராக, ஃபரூக் ஹசனாத் தொடுத்த வழக்கில், நேற்று (ஜனவரி 19), ராவல்பிண்டி நீதிமன்றம் அனிகா அட்டிக்கை குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

இறைதூதர்களுக்கு எதிராக நிந்தனை செய்ததாகவும், இஸ்லாத்தை அவமதித்ததாகவும், சைபர் கிரைம் சட்டங்களை மீறியதாகவும் அனிகா அட்டிக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

அனிகா அட்டிக்கும் ஃபரூக் ஹசனாத்தும் நண்பர்களாக இருந்துள்ளனர் என்றும் ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வரவே, கோபமடைந்த அனிகா அட்டிக்கா  ‘மத நிந்தனை’ குறுஞ்செய்திகளை ஃபரூக் ஹசனாத்துக்கு வாட்ஸ்அப் செயலி வழியாக அனுப்பியுள்ளார் என்றும் ஃபரூக் ஹசனாத் தொடுத்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த குறுஞ்செய்திகளை அழிக்க வேண்டும் என்றும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஃபரூக் வலியுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு அனிகா அட்டிக் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, ஃபரூக் ஹசனாத் அனிதா அட்டிக்கிற்கு எதிராக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருக்கிறார். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, அனிதா அட்டிக்மீது வழக்குப் பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டார்.

1980-களில் முன்னாள் இராணுவ சர்வாதிகாரி ஜியா-உல் ஹக் ஆட்சிகாலத்தில் பாகிஸ்தானில் ‘மத நிந்தனைச் சட்டம்’ இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் யாரும் இதுவரை தூக்கிலிடப்படவில்லை என்றாலும், மத நிந்தனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, சியால்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர், மத நிந்தனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்