Aran Sei

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சட் ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ருத்ர தாண்டவம்.

நேர்மையான காவல்துறை அதிகாரியான ருத்ர பிரபாகரன் (ரிச்சட் ரிஷி) போதைப்பொருள் விற்கும் கும்பலை அழிப்பவராக வருகிறார். போதைப்பொருள் (கஞ்சா) விற்கும் இளைஞர்களை கைது செய்ய முயற்சிக்கும்போது ஒருவருக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. சில நாட்கள் கழித்து பலத்த காயமடைந்த அந்த இளைஞர் இறந்து போக அதற்கு ருத்ர பிரபாகரனே காரணம் என்று வழக்குப் பதிவாகிறது. பிரபாகரன் விரட்டிப்பிடித்த இளைஞரின் சட்டையில் அம்பேத்கர் படம் போட்டிருந்ததாகவும் அதனால் சாதிய நோக்கத்தோடு பிரபாகரன் அந்த இளைஞரைத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அக்குற்றச்சாட்டின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதாகிறார் பிரபாகரன். ’போலி’ குற்றச்சாட்டிலிருந்து வெளிவந்தாரா என்பதே ருத்ர தாண்டவத்தின் கதை.

திரௌபதி படத்தில் ’நாடகக் காதல்’ குறித்துப் பேசியதற்காக பிரபலமாக அறியப்பட்டவர் மோகன் ஜி. ஜீன்ஸ், டி.ஷர்ட் அணிந்து ஆதிக்கச் சாதிப் பெண்களை தலித் இளைஞர்கள் பணத்திற்காக காதலிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதை ’திரௌபதி’ எனும் படமாக எடுத்திருந்தார். அதாவது, ஆதிக்கச் சாதி பெண்களை ‘நாடகக் காதல்’ செய்து குறுக்கு வழியில் பெண்வீட்டாரின் சொத்துக்களை அபகரித்துப் பணக்காரர்களாகத் துடிக்கும் தலித் ஆண்களை/ இயக்கத்தை அடையாளம் காட்டியிருப்பதாக படம் குறித்து பரவலாகப் பேசப்பட்டது. படத்தின் விணியோகஸ்தரும் நடிகருமான JSK கோபி இவ்விசயத்தில் ஒப்பீட்டளவில் வன்னியர் பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் எதார்த்தமோ வேறொன்றாக உள்ளது.

ஒருமுறை மக்கள் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குரு, வன்னியர்கள் தலித்துகளை விட தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும், வசிப்பதற்கு இடம் இல்லாமல் ஆடு, மாடுகள் கட்டும் கொட்டகையில் வசிப்பதாகவும் சாராயத்துக்கு அடிமையான சாதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். குருவின் வாக்குமூலத்தின் வழியாக  பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள வன்னியர் சமுகத்தின் பெண்களைப் பணத்திற்காக தலித் இளைஞர்கள் காதலிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

மேலும், இந்தியாவில் சராசரியாக 10 விழுக்காடு திருமணங்கள் தமது சாதியைச் சேராத வேறொருவரோடு நடப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் ஒட்டுமொத்தமாக 5 விழுக்காடு திருமணங்களே ஒரு பெண் தனது சாதியைவிட சமூக அந்தஸ்து குறைந்த சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்கிறார். சமூகநீதி தழைத்தோங்கும் தமிழ்நாட்டில் வெறும் இரண்டரை சதவீதம்தான் சாதிமீறி திருமணங்கள் நடக்கின்றன. அதிலும் ஒரு பெண் தன்னைவிட கீழுள்ள சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொள்வது வெறும் 1.66 விழுக்காடு மட்டும்தான். இதில், சாதி இந்துப் பெண் தலித் சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்வது 1.66 விழுக்காட்டை விட குறைவு என்கிறது ஆய்வு. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் திரௌபதி படத்தில் கூறப்படும் ’நாடகக் காதல்’ என்பது இயக்குநரின் அரசியலுக்காகவும் சொந்த காழ்புணர்ச்சிக்காகவும் எடுக்கப்பட்டது என்பது நிரூபனமாகிறது.

அந்தக் தவறான கட்டமைப்பின் தொடர்ச்சிதான் ருத்ர தாண்டவம் திரைப்படமும். படத்தில் இளைஞர்கள் போதை மருந்தால் சீரழிவது, மத மாற்றம், தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ‘தவறாக’ பயன்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது. இந்தப் படத்திலும் பெண்களுக்கு ‘ஒழுக்க’ வகுப்புகள் நடத்தியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. தமிழ் சினிமாவில் வழக்கமான, ஒழுக்கமான, நேர்மையான, அன்பான, கோபமான, சட்டப்படி நடக்கின்ற காவல்துறை ஆய்வாளராக வரும் கம்ப்ளீட் ஆக்டர் (மோகன். ஜி கூறியது) ரிச்சட் ரிஷி படம் முழுவதும் நடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். ஆனால், அதற்குள் படம் முடிந்து விடுகிறது. கம்யூனிஸ்ட் அமைப்பின் தலைவராக, ஈழ விடுதலை வைத்து அரசியல் செய்பவராக, லெனின், ஸ்டாலின், மாவோ, புத்தர், ஒபாமா (ஒபாவுக்கும் கம்யூனிசத்திற்கும் என்ன தொடர்பு?) அரசு தரப்பு வழக்கறிஞரைக் கட்டுப்படுத்துபவராக, 200 கோடி மதிப்புள்ள போதை மருந்தை கடத்தும் வில்லனாக வாதாபிராஜன் கதாப்பாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார்.

போதை மருந்து கொடுத்து மயக்கிப் பெண்களை நிர்வாணப் படமெடுப்பவர்கள் தொடங்கி, கஞ்சா விற்பவர்கள்வரை வடசென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் பட்டியல் சாதி மக்களாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வடசென்னை குறித்து தமிழ்சினிமாவின் வழக்கமான சித்தரிப்பே இதிலும் தெரிகிறது.  போதைக் கடத்தலில் ஈடுபட்ட இளைஞன் மரணமடைந்ததன் மர்மம் என்ன என்பதுதான் கதையின் மையம். படம் அதை நோக்கி நகர்த்தாமல் சாதி, மதமாற்றம் என்று தன்னுடைய காழ்ப்பை தூவி இருக்கிறார் மோகன் ஜி.

இறந்து போன இளைஞர் பட்டியல்சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஞானஸ்த்தானம் எடுத்து கிறித்துவ மதத்திற்கு மாறியதால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் செல்லாது என்கிற வாதமும், சான்றிதழின் படி அவர் பட்டியல் சமூகம்தான் என்கிற வாதமும் நீதிமன்றத்தில் வைக்கப்படுகிறது. மதம் மாறினால் சாதியைப் பயன்படுத்தக் கூடாது என்கிற வாதத்தின் வழியே வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்கிற வாதத்தைக் கடுமையாக முன்வைக்கிறார் இயக்குநர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், அதில் தேவையான திருத்தங்களை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்பதும் படத்தின் கருத்தாக உள்ளது.

இதே கருத்தைதான் பாமக நிறுவனர் ராமதாஸ் 2016 ஆம் ஆண்டு கூறியிருந்தார். ஆனால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் எதார்த்தம் என்னவென்றால், வன்கொடுமைக்கு ஆளானவர் புகார் கொடுத்தாலும், அவற்றில் பெரும்பாலான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை. பல வழக்குகள் நீதிமன்றத்துக்கு வெளியே முடித்து வைக்கப்படுகிறது. பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் புகார் கொடுக்கச் சென்றால், அங்கே ஆதிக்கச் சாதியினர் காவல்துறை அதிகாரிகளாக இருக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் என்றுகூட பார்க்காமல் வழக்குப் பதிவு செய்ய மறுக்கப்படுவது வழக்கமாகிறது.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையே கோயிலுக்குள் அனுமதிக்கப்படாதது கடந்த காலங்களில் நடந்தது. அதிகாரம் மிக்க இவர்களைப் போன்றோருக்கே இந்நிலை என்றால், எளிய உழைக்கும் பட்டியல் சாதி மக்களின் நிலையைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தால் குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால், அவரின் நியமன நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும் என்கிறது வன்கொடுமை தடுப்புச் சட்டம். ஆனால், ருத்ர தாண்டவம் படத்தில், இவ்விதியை கடைப்பிடிக்காமலேயே மிக எளிதாக  காவல்துறை ஆய்வாளர் ருத்ர பிரபாகரன் தண்டிக்கப்படுவதாக காட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை மக்களிடம் திணித்து, அச்சட்டத்தை ஒற்றைச்சார்புள்ள சட்டமாக இருப்பதாக புனைந்துள்ளார் மோகன் ஜி.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை விட மிக முக்கியமான ஒன்று குறித்தும் ருத்ர தாண்டவம் படத்தில் பேசுகிறார் இயக்குனர். நம்பிக்கையின் அடிப்படையில் இந்து அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றுபவர்கள், சட்டரீதியாக தங்கள் சமூகத்திற்கு அரசு வழங்கும் உரிமைகளைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார். மதம் மாறுவதே இந்துமத்ததின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேற நினைக்கும் எத்தனம்தான் என்று இயக்குனர் புரிந்து கொள்ள மறுப்பது அவரின் அறிவு போதாமையைக் காட்டுகிறது. “சாதி என்பது அருவமான கருத்தியல் எல்லைகளை மட்டுமின்றி ஸ்தூலமான நிலவியல் எல்லைகளையும் கொண்டிருக்கிறது. அருவமான எல்லைகளைக் கடந்தாலும்கூட ஸ்தூலமான எல்லைகளைக் கடப்பதற்கு சாதியவாதிகள் அனுமதிப்பதில்லை. சாதியின் செயல்பாடு நுட்பமானது. நிலவியல் எல்லைகள் நெகிழ்வாயிருக்கும் நகர்ப்புறச் சூழலில் கருத்தியல் எல்லைகளை வலுவாக்குவது; கருத்தியல் எல்லைகள் கடக்கப்படும் இடங்களில் நிலவியல் எல்லைகளைத் தாண்டமுடியாமல் செய்வது – என இரட்டைத் தன்மையோடு சாதி செயல்படுகிறது” என்கிறார் எழுத்தாளர் ரவிக்குமார். சாதியானது கருத்தியல் தளத்திலும் பொருளியல் தளத்திளும் வினையாற்றுகிறது. மதம் மாறினால் கூட உடனடியாக சாதியின் கோரத்தால்  நிகழந்த இழப்புகளில் இருந்து விடுபடமுடியவில்லை என்பதே எதார்த்தம்.

***

வரலாற்றில் வன்னியர்களும் தீண்டாமைக்கு ஆளாகி உள்ளார்கள். ஒரு சாதி இன்னொரு சாதிக்குச் சமமானது இல்லை என்பதுதான் இந்து சனாதானத்தின் கோட்பாடு. சாதிப் படிநிலையில் வன்னிய சாதியைவிட உயர்ந்த  சாதிகள் இருப்பதை மோகன் ஜி அறிவார். “உடையார்களோடும் வெள்ளாளர்களோடும் குறைந்த சாதியான வன்னியர்கள் சேர்ந்து உண்ணும் வழக்கம் இல்லை. வன்னியர்களை மேற்சொன்ன சாதிகள் தங்களுக்குச் சமமாக சேர்த்துக் கொள்வதில்லை” என்கிறது ஆங்கிலேய அரசின் Madras District Gazetteers. (1917). ஆக வன்னியர்களின் மதமாற்றத்திலும் தீண்டாமை, சாதி இழிவு முக்கிய பங்காற்றி இருக்கிறது.

இன்னும் இன்றும் சமூக இழிவுக்கு ஆளாகிறார்கள் வன்னியர்கள் என்பதாலும்.  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தமிழ்நாட்டில் 20 விழுக்காடும், ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டம் 1987 ஆம் ஆண்டு மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த இட ஒதுக்கீடு போராட்டகாரர்களை அடக்குவதற்கு காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது வரலாறு.

இந்து மதத்தில் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளான வன்னிய சமூகத்தினர் கணிசமாக கிறித்துவ மதத்திற்கு மாறியுள்ளனர்.  கிறித்துவ மதத்திற்கு மாறினாலும் இன்னும் சமூகப் புறகணிப்பு நிகழ்வதால், கிறித்துவ வன்னியர் சங்கத்தினர் தங்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை மனுவளித்தனர்( தினகரன் நாளிதழ்: ஆகஸ்ட் 22, 2021).

மேலும், திருச்சபையிலும் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கிறித்துவ வன்னியர்களின் குரல் எழுகிறது.  மதம் மாறினால் சாதியைப் பயன் படுத்தக் கூடாது என்கிறார் இயக்குநர் மோகன். ஜி. அவரின் கூற்றுப்படி பார்த்தால் கிறித்துவ வன்னியர்கள் நீண்ட நாள் கோரிக்கையான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்கு  எதிராக இருக்கிறது ருத்ர தாண்டவம். கிறித்துவ வன்னியர்களின் நீண்டநாள் கோரிக்கையான ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மார்ச் 29, 2008 தினமணி இதழில் உளுந்தூர்பேட்டை எறையூர் பகுதியில் தலித் கிறித்துவர்களுக்கும் வன்னிய கிறித்துவர்களுக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. மதம் மாறினாலும் இந்திய சாதிய மனம் இன்னும் சாதியிலேயே உழல்கிறது என்பதையே இதுகாட்டுகிறது. தேவாலயங்களில் சில சமூகத்தினர் புறக்கணிப்புக்கு உள்ளாவதாக குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆக, இந்தியாவில் மதம் மாறினாலும் சாதிய அழுக்கு மாறவில்லை என்பது தெரிய வருகிறது.

சரி ருத்ர தாண்டவம் படத்திற்கு வருவோம். மதம் மாறியவர்கள் சாதியை வைத்து தங்களின் அரசின் சாதிச்சார் உரிமைகளைக் கோரக்கூடாது என்கிறார். இந்து வன்னியர்களுக்கு வழங்கப்படும் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் , கிறித்துவ மதத்திற்கு மாறிய  வன்னியர்கள் தாங்களும் இன்னும் சாதியால் புறக்கணிக்கப்படுவதால் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீட்டில் பங்கு கேட்கின்றனர். அதையும் எதிர்க்கிறாரா மோகன் ஜி? படத்தில் அரசியல் தெளிவின்மையால் பார்க்கும் நம்மை மட்டுமல்ல இயக்குநருக்கும் குழப்பம் இருக்கிறது. இந்துவாக பிறந்தால் இந்துவாகத்தான் சாக வேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறது திரைப்பிரதி. வரலாறு, அரசியல் குறித்த எவ்வித புரிதல் இல்லாமல் வாட்சாப், ஃபேஸ்புக்கில் வந்த செய்திகளை எல்லாம் தொகுத்த மீம்ஸ் கண்ட்டண்டாக இருக்கிறது மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம்.

படம் மிக நீளமாக இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைப் பார்த்த உணர்வு மேலோங்குகிறது. கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்குறேன் மேக்கிங்கை பாருங்கள் என்று மோகன்.ஜி கர்ஜித்தார். திரௌபதி எனும் நாடகத்தை மன்னிக்கனும் படத்தைவிட ருத்ர தாண்டவம் மேம்பட்டு இருக்கிறது.  ஆனால் படத்தில் விசத்தை தூவி இருக்கிறார். மதம் மாறிய வன்னியர்களின் உரிமை குரலுக்கு எதிராக மோகன்.ஜி பேசியிருக்கிறார். இனி எல்லாம் அந்த திரௌபதி தாய் பார்த்துக்கொள்வாள்.

(கட்டுரையாளர் : சந்துரு மாயவன், முனைவர் பட்ட ஆய்வாளர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்