Aran Sei

நீட் விலக்களித்து ஒன்றிய அரசு ஒப்பமிடும் வரை ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பெ. மணியரசன் வேண்டுகோள்

ந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் இளம் பிஞ்சுகளை, காவி அரசு காவு வாங்கிக் கொண்டுள்ளது. பிரஞ்சு நாட்டில் லூயி மன்னர்கள் கில்லட்டின் கொலைக் கருவியால் மக்கள் கழுத்தைக் கத்தரித்துக் கொலை செய்தார்கள். தமிழ்நாட்டிலோ நீட் தேர்வே கில்லட்டின் கொலைக் கருவி ஆகிவிட்டது”. என்று கூறியுள்ளார்.

மேலும்,  “நம் தமிழ்ப் பிஞ்சுகளை நீட் பூதம் விழுங்குகிறது. நரேந்திர மோடியிலிருந்து தமிழ்நாட்டு அண்ணாமலை வரை உள்ள ஆரியத்துவா வாதிகளுக்கு இவ்வுயிர்ப் பறிப்புகள் அதிர்ச்சியை அளிக்காது. அவர்கள் பாரதமாதாவுக்குக் கொடுத்த இரத்தப்பலி என்று உள்ளூர உவப்பார்கள். ஆனால் நாம் அனிதா தொடங்கி அடுத்தடுத்து இதுவரை 16 பிள்ளைகளை நீட் பூதத்தின் வாயில் கொடுத்து விட்டு அன்றாடம் துடிக்கிறோம்! இந்த நீட் கொலைகள் தொடர அனுமதிக்கலாமா?”  என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, “ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் கூட மாநில சட்டமன்றத்தின் வசம் கல்வி அதிகாரம் இருந்தது. “குடியரசு” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் குடிகளின் அரசில் கல்வி, மாநில சட்டப் பேரவை அதிகாரத்தில் இல்லை”. என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலப் பட்டறிவுகளிலிருந்து தமிழ்நாட்டு ஆளுங்கட்சியும், நீட்டை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளும் புதிய உத்திகளை வகுத்து நீட் தேர்வு விலக்கு முன்வடிவுக்கு இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

புதிய ஆளுநர் பதவி ஏற்றப் பின் இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். ஒன்று அவர் கையொப்பம் இட்டுச் சட்டமாக அறிவிக்க வேண்டும். அல்லது கையொப்பமிட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டு நீட் விலக்கு சட்ட முன்வடிவு தமக்கு வந்த மூன்று நாளில் கையொப்பமிட்டு சட்டமாக்க வேண்டும் என்றும் பெ.மணியரசன் கோரியுள்ளார்.

மேற்கண்ட முறையில் தமிழ்நாடு ஆளுநரும் இந்திய ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டியதில்லை என்று விலக்களிக்கும் சட்ட முன்வடிவைச் சட்டமாக்கவில்லை என்றால், தமிழ்நாடு முதலமைச்சர், மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் கட்சிகள் ஆதரவை நீட்டுக்கு எதிராக ஒருங்கு திரட்ட முயல வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள், அனைத்து இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு இந்திய அரசு ஒப்பம் அளிக்கும் வரையில்,  ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து செயல்படுத்த வேண்டுமென தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்