Aran Sei

‘அமைச்சரவை அனுமதி பெறாமல், சட்டங்களை இயற்றுவதும் திரும்பப் பெறுவதும் பாஜக ஆட்சியில் மட்டும்தான் நடக்கும்’- ப.சிதம்பரம்

ன்றிய அமைச்சரவையின் முன் அனுமதி பெறாமல், சட்டங்களை இயற்றுவதும் திரும்ப பெறுவதும் பாஜக அட்சியில் மட்டும்தான் நடக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள்  நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 20), தனது டிவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம், “பாஜக தலைவர் ஒருவர் கூறினார், விவசாயிகளின் நலனுக்காக வேளாண் சட்டங்களை இயற்றினார்களாம், தேச நலனுக்காக அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுகிறார்களாம் மக்களை எவ்வளவு ஏமாளிகள் என்று பாஜக கருதுகிறது என்று பாருங்கள். விவசாயிகள் நலன் வேறு தேச நலன் வேறு என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? இந்திய விவசாயிகள் அந்நியர்கள் அல்லது இந்திய விவசாயிகள் எதிரிகள் என்று பாஜகவினர் கருதுகிறார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“வேளாண் சட்டங்கள் தவறு, அரசின் முடிவு தவறு, பல நூறு விவசாயிகள் இறந்ததற்கு அரசு மன்னிப்புக் கேட்கிறது என்று பிரதமர் சொல்லியிருந்தால் அவர் மனமும் எண்ணமும் உண்மையில் மாறி இருக்கின்றன என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்படிச் சொல்லவில்லையே?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “எதிர்வரும் 5 மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதி என்று தெரிந்த பிறகல்லவா வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது? யாருக்கும் அஞ்சாத பிரதமர், நல்லவேளை தேர்தல் தோல்விக்கு அஞ்சுகிறார். ஜனநாயகம் பிழைத்து விடும் என்று இனி நம்பலாம்” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “பிரதமர் மோடியின் அறிவிப்பானது மிகச் சிறந்த அரசியல் திறனின் வெளிப்பாடு என்று உள்துறை அமைச்சர் புகழ்ந்துள்ளார். பாஜக தேசியத் தலைவரோ, விவசாயிகள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி இம்முடிவு எடுத்துள்ளார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்” என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த 15 மாதங்களாக இந்தத் திறன்மிக்க தலைவர்களும் அவர்களின் திறன்மிக்க ஆலோசனைகளைக் கூறாமல் எங்கு சென்றார்கள்? நீங்கள் ஒன்று கவனத்தீர்களா. ஒன்றிய அமைச்சரவையைக் கூட்டாமல், ஒப்புதல் பெறாமல் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சரவையின் முன் அனுமதி பெறாமல், சட்டங்களை இயற்றுவதும் திரும்பப் பெறுவதும் பாஜக அட்சியில் மட்டும்தான் நடக்கும்” என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்